தீவிரமடையும் போர்: ஹமாஸ் அமைப்பின் தளபதி கொலை..!!


தீவிரமடையும் போர்: ஹமாஸ் அமைப்பின் தளபதி கொலை..!!
x
தினத்தந்தி 25 Oct 2023 9:25 PM GMT (Updated: 26 Oct 2023 4:34 PM GMT)

ஹமாஸ் அமைப்பின் வடக்கு பகுதியின் தளபதி ஹசான் அல் அப்துல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

டெல் அவிவ்,

Live Updates

  • 25 Oct 2023 10:29 PM GMT

    சிரியாவில் 8 ராணுவ வீரர்கள் பலி

    நேற்று சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள பல்வேறு ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இதில் சிரியா ராணுவ வீரர்கள் 8 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர், ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனத்தின் போராளி குழுக்களின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • 25 Oct 2023 10:06 PM GMT

    ஹமாசை ஒழிக்கும் வரை போர் தொடரும் - இஸ்ரேல்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்தும், மத்திய கிழக்கின் நிலைமை குறித்தும் விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் கூடியது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார். அதேபோல் கூட்டத்தில் பங்கேற்ற உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தின.

    ஆனால் இஸ்ரேல் அதனை நிராகரித்தது. மேலும் ஹமாசை ஒழிக்கும் வரை போர் தொடரும் எனவும் சூளுரைத்தது. இது குறித்து பேசிய இஸ்ரேல் வெளியுறவு மந்திரி எலி கோஹன், “அக்டோபர் 7-ல் ஹமாஸ் அமைப்பினர் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு சரியான பதிலடி, ஹமாசை ஒட்டுமொத்தமாக ஒழிப்பது ஆகும். ஹமாஸை அழிப்பது இஸ்ரேலின் உரிமை மட்டுமல்ல. இது எங்கள் கடமை'' என்றார்.

    அதன்படி காசா மீதான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நேற்று மேலும் தீவிரப்படுத்தியது. வடக்கு, தெற்கு மற்றும் மத்திய காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காசாவில் இதுவரை 5,800-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சுமார் 2,300 பேர் குழந்தைகள் ஆவர்.

  • 25 Oct 2023 9:57 PM GMT

    காசாவில் நிரம்பி வழியும் மயானங்கள்

    இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில் இறந்தவர்களின் உடலை புதைக்க இடம் இல்லாமல் மயானங்கள் நிரம்பி வழிகின்றன.

    இது ஒருபுறம் இருக்க காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வரும் வேளையில் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் காசாவில் இருக்கும் ஆஸ்பத்திரிகள் திணறி வருகின்றன.

    மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு, மின்தடை போன்ற காரணங்களால் காசாவில் 3-ல் ஒரு ஆஸ்பத்திரி முற்றிலுமாக செயல்படுவதை நிறுத்திவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • 25 Oct 2023 9:32 PM GMT

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ரத்தக்களறியான போர்

    ஐ.நா.வின் போர் நிறுத்த அழைப்பை நிராகரித்த இஸ்ரேல் ஹமாசை ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என சூளுரைத்துள்ளது. அதன்படி காசா மீதான குண்டு மழையை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 20-வது நாளை எட்டியுள்ளது. இரு தரப்புக்கும் இடையில் இதற்கு முன் ஏற்பட்ட 5 போர்களைவிடவும், தற்போதைய போர் ரத்தக்களறியான போராக மாறியிருக்கிறது.

    குண்டு வீச்சில் தரைமட்டமாகும் கட்டிடங்களின் இடிபாடுகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக உயிருடன் புதையுண்டு வருகின்றனர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான கருவிகள் மற்றும் கனரக வாகனங்கள் கிடைக்காத நிலையில் மக்கள் வெறும் கைகளிலேயே இடிபாடுகளை அகற்றி அதன் அடியில் சிக்கியவர்களை தேடி வருகின்றனர்.


Next Story