'கோர்ட்டு மூலமாக என்னை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் சதி செய்கிறது' - இம்ரான்கான் குற்றச்சாட்டு


கோர்ட்டு மூலமாக என்னை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் சதி செய்கிறது - இம்ரான்கான் குற்றச்சாட்டு
x

தன் மீதான 10 வழக்குகளில் விசாரணைக்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இம்ரான்கான் ஆஜரானார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது நூற்றுக்கணக்கான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 9-ந் தேதி ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜராக வந்தபோது இம்ரான்கான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பாகிஸ்தானில் பெரும் வன்முறை வெடித்தது. இம்ரான்கானின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மீது ராணுவ கோர்ட்டு மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவம் சூளுரைத்துள்ளது.

இந்த நிலையில் தன் மீதான 10 வழக்குகளில் விசாரணைக்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இம்ரான்கான் நேற்று முன்தினம் ஆஜரானார். அதை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் அவர் பேசுகையில், "எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆதாரமற்றவை என்பதை அவர்கள் அறிவார்கள். மேலும் இந்த போலி வழக்குகளில் எனக்கு தண்டனைக்கு வாய்ப்பு இல்லை என்பது அவர்களுக்கு தெரியும். எனவே எனது விசாரணையை ராணுவ கோர்ட்டில் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். கோர்ட்டு மூலமாக என்னை ஒடுக்க ராணுவம் சதி செய்கிறது" என கூறினார்.


Next Story