பிரதமர் மோடி அழைப்பின் பேரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பார் என அறிவிப்பு


பிரதமர் மோடி அழைப்பின் பேரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பார் என அறிவிப்பு
x

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் பங்கேற்கின்றனர்.

இஸ்லாமாபாத்,

சீனாவின் ஷாங்காயில் நடந்த மாநாட்டில் உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தற்போதைய தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இந்நிலையில் இந்த அமைப்பின் 23-வது மாநாடு வருகிற 4-ந் தேதி காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் பங்கேற்பார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு பாகிஸ்தான் அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிக்காட்டும் வகையில் பிரதமர் ஷெபாஸ் ஷரீப்பின் பங்கேற்பு இருக்கும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் முக்கிய கருத்துகளை தெரிவிப்பார் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்பு குறித்து தற்போதுதான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தலைமையில் முதல் முறையாக இந்த மாநாடு நடைபெறும் நிலையில், சீனா பீஜிங்கில் உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைமைச்செயலகத்தில், நவீனமாக அமைக்கப்பட்ட 'புதுடெல்லி அரங்கு' சமீபத்தில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story