பொருளாதார நெருக்கடி: இரண்டாவது கட்டமாக 8 லட்சம் ஆப்கானிய அகதிகளை திருப்பி அனுப்பும் பாகிஸ்தான்


பொருளாதார நெருக்கடி: இரண்டாவது கட்டமாக 8 லட்சம் ஆப்கானிய அகதிகளை திருப்பி அனுப்பும் பாகிஸ்தான்
x
தினத்தந்தி 25 March 2024 11:45 PM GMT (Updated: 25 March 2024 11:45 PM GMT)

பாகிஸ்தானில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் ஆப்கானிஸ்தான் குடியுரிமை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இஸ்லாமாபாத்,

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள சட்ட விரோத அகதிகளை திருப்பி அனுப்பி வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்தனர். அந்தவகையில் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆப்கானிய அகதிகள் பாகிஸ்தானில் குடியேறினர்.

எனவே முதற்கட்டமாக சட்ட விரோதமாக குடியேறிய ஆப்கானிய அகதிகளை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதன்மூலம் சுமார் 13 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தநிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக ஆப்கானிஸ்தான் குடியுரிமை வைத்திருக்கும் அகதிகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்க நேற்று வரை காலக்கெடு விதிக்கப்பட்டது.

இதில் பாகிஸ்தானில் உள்ள சுமார் 8 லட்சத்து 80 ஆயிரம் அகதிகள் ஆப்கானிஸ்தான் குடியுரிமை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்களையும் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை பாகிஸ்தான் அரசாங்கம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நடவடிக்கை அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ந்தேதிக்குள் முடியலாம் என அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.


Next Story