தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 5 லட்சம் பீப்பாயாக குறைக்க சவுதி அரேபியா முடிவு...!


தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 5 லட்சம் பீப்பாயாக குறைக்க சவுதி அரேபியா முடிவு...!
x

Image Courtesy: AFP

தினசரி கச்சா எண்ணெய் உற்பத்திய 10 லட்சம் பீப்பாய்களாக குறைக்க ஒப்பெக் நாடுகள் முடிவெடுத்துள்ளன.

துபாய்,

உலகளாவிய பொருளாதாரம் கச்சா எண்ணெய் மற்றும் அது தொடர்பான விலையை பொருத்தே இயங்கி வருகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் அரேபியா நாடுகள், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட சில நாடுகளாலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதனிடையே, கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரேபிய நாடுகள் ஒப்பெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்த கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அளவையும் நிர்ணயிக்கின்றன.

இந்நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள சவுதி அரேபியா தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்க உள்ளது.

வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை தினமும் 5 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

அதேபோல், ஒபெக் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளன.

அதன்படி, தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை ஈரான் 2 லட்சத்து 11 ஆயிரம் பீப்பாயாகவும், குவைத் 1 லட்சத்து 28 ஆயிரம் பீப்பாயாகவும், ஓமன் 40 ஆயிரம் பீப்பாயாகவும், ஐக்கிய அரபு அமீரகம் 1 லட்சத்து 44 ஆயிரம் பீப்பாயகவும் குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஒப்பெக் கூட்டமைப்பில் இருந்து பெறப்படும் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி 10 லட்சத்து 23 ஆயிரம் பீப்பாயாக குறைய உள்ளது. வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை இதே அளவிலான தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒபெக் கூட்டமைப்பு நாடுகளில் சேராத ரஷியாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் மே மாதத்தில் இருந்து தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்க உள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவே தன்னிச்சையாக இந்த உற்பத்தி குறைப்பை மேற்கொண்டுள்ளதாக சவுதி அரேபியா உள்ளிட்ட ஒபெக் நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story