தைவான் நிலநடுக்கம்: 7 பேர் பலி; 730 பேர் காயம்


தைவான் நிலநடுக்கம்: 7 பேர் பலி; 730 பேர் காயம்
x

தைவானில், வருகிற நாட்களில் அதிக அளவில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தைப்பே,

தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது. நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. எனினும், தைவானின் கிழக்கு நகரான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் குலுங்கின. சில சரிந்து விழுந்தன.

தைப்பேவில் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது. ரெயிலில் பயணம் செய்தபோது, ரெயில் குலுங்கியபடி சென்ற வீடியோ காட்சிகள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தின. காலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கம் எதிரொலியாக மக்கள் அலறியடித்து, பாதுகாப்பான இடங்களை தேடி தஞ்சம் அடைந்தனர். சாலைகளில் கார்கள், பைக்குகள் உள்ளிட்டவற்றில் செல்லும்போது நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. பாலங்களும் அதிர்வால் குலுங்கின.

தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில், 1999-ம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, 2,400 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்நிலநடுக்கம் உணரப்பட்டதும் ஜப்பானில் 15 நிமிடங்களுக்கு பின்னர் யோனகுனி கடலோரத்தில் வழக்கத்திற்கு மாறாக, அலைகள் சற்று உயரே எழும்பின. மியாகோ மற்றும் யேயாம தீவுகளிலும் அலைகள் உயரே எழுந்து வீசக்கூடும் என கூறப்பட்டது.

அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 ஆக பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டது. அந்நாட்டின் ஒகினவா மாகாணத்தின் தெற்கே கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கான அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டன. இதேபோன்று பிலிப்பைன்சிலும், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. எனினும், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்சில் இருந்து சுனாமி எச்சரிக்கை பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 730 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த நபர்களில் 3 பேர், அந்த பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட குழுவை சேர்ந்தவர்கள் ஆவர். நிலநடுக்கம் எதிரொலியாக பாறைகள் உருண்டோடி மேலே விழுந்ததில் அவர்கள் பலியானார்கள்.

இதேபோன்று, சுரங்கத்திற்கு அருகே சென்றபோது நிலச்சரிவு ஏற்பட்டு அதில் சிக்கி லாரி ஓட்டுநர் ஒருவர் பலியானார். நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அடுக்குமாடி குடியிருப்புகள், பிளாட்டுகள், வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல், சாலைகள் என பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் இதனை உணர்ந்துள்ளனர்.

இந்நிலநடுக்கம், சீனா, ஹாங்காங், ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டு உள்ளது. இதன்படி, சீனாவின் கிழக்கே அமைந்த புஜியான் மாகாணத்தில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டன என சமூக ஊடக பயனாளர்கள் தெரிவித்தனர். ஹாங்காங் குடியிருப்புவாசிகளும் அதிர்வுகளை உணர்ந்துள்ளனர். வருகிற நாட்களில் அதிக அளவில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story