அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரமாண்டமாக நடைபெற்ற புஷ்பயாகம்


கோவில் வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் சர்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளினார்.

திருப்பதி:

திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் முடிந்தபிறகு அதில் ஏற்பட்ட குறைகளை களைவதற்காக புஷ்பயாகம் நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில், கடந்த மாதம் 17-ம் தேதி முதல் 25-ம்தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் புஷ்பயாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

புஷ்பயாகத்தை முன்னிட்டு, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை உற்சவமூர்த்திகளான ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பால், தயிர், தேன், சந்தனம், தேங்காய் நீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அத்துடன், புஷ்பயாகம் செய்ய பயன்படுத்தப்பட்ட மலர்கள் கோவிலில் உள்ள மூலவரிடம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் கோவிலை வலம் வந்து மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கோவில் வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் சர்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளினார்.

மதியம்2:40 மணி முதல் 5 மணி வரை வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் முழங்க புஷ்பயாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. துளசி, சாமந்தி, சம்பங்கி, ரோஜா, அல்லி உள்ளிட்ட 18 வகையான மலர்கள் மற்றும் ஆறு வகையான இலைகளால் புஷ்பயாகம் நடத்தப்பட்டது. இந்த புஷ்பயாக மஹோத்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story