அச்சமூட்டும் "ஒமிக்ரான்" கொரோனா வைரஸ்!


அச்சமூட்டும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ்!
x
தினத்தந்தி 28 Nov 2021 7:49 PM GMT (Updated: 28 Nov 2021 7:49 PM GMT)

உலகம் முழுவதுமே கடந்த 2 ஆண்டுகளாக வேறு எந்த முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் கவனம் செலுத்த முடியாமல், கொரோனா வைரசை ஒழிப்பதில்தான் தன் முழு கவனத்தையும், முயற்சிகளையும் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

உலகம் முழுவதுமே கடந்த 2 ஆண்டுகளாக வேறு எந்த முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் கவனம் செலுத்த முடியாமல், கொரோனா வைரசை ஒழிப்பதில்தான் தன் முழு கவனத்தையும், முயற்சிகளையும் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

உலகில் முதன் முதலில் 2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி, இந்த கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள உகான் நகரில் கண்டறியப்பட்டது. அப்போதே, எங்கே இது உலகம் முழுவதும் பரவிவிடுமோ? என்ற அச்சம் இருந்தது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி கேரளாவிலுள்ள திருச்சூர் மருத்துவமனையில், உகான் நகரில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த கேரள மாணவியிடம் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் 7-ந்தேதி, காஞ்சீபுரத்தை சேர்ந்த ஓமன் நாட்டிலிருந்து திரும்பிய ஒரு பொறியாளரால் கொரோனா காலூன்றியது. அன்று தொடங்கி வெகுவேகமாக கொரோனா தமிழ்நாட்டிலும் பரவியது.

உலகில் பல நாடுகளில் கொரோனாவின் உருமாற்றங்களால் பல புதிய வைரஸ்கள் பாதித்தன. கொரோனாவில் இருந்து நூற்றுக்கணக்கான உருமாறிய வைரஸ்கள் இருந்தாலும், 4 வகையான வைரஸ்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா ஆகிய 4 வைரஸ்களில் தற்போது பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் டெல்டா வைரஸ் தமிழ்நாட்டிலும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் 2-வது அலை பாதிப்பு இப்போது இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருவதால் பொருளாதாரம் உத்வேகம் அடையத் தொடங்கியுள்ளது. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில், தென் ஆப்பிரிக்க நாட்டில் இப்போது, பி.1.1.529 என்ற உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு “ஒமிக்ரான்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த “ஒமிக்ரான்” தென்ஆப்பிரிக்காவில் மட்டுமல்லாமல், நமிபியா, போட்ஸ்வானா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாங்காங், பெல்ஜியம், இஸ்ரேல், டென்மார்க், இத்தாலி உள்பட பல நாடுகளிலும் கால்பதித்துவிட்டது. இதுமிகவும் கவலையளிக்கத்தக்க கொரோனா என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. மேலும், இது மற்ற வைரஸ்களைவிட வேகமாக பரவும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த கொரோனா தங்கள் நாட்டுக்குள் பரவிவிடக்கூடாது என்ற பயத்தில், ஐரோப்பிய யூனியனில் உள்ள 24 நாடுகள் மட்டுமல்லாமல், இங்கிலாந்து, இஸ்ரேல், இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகள் தென்ஆப்பிரிக்காவில் இருந்துவரும் விமானங்களை தடை செய்துள்ளன. இந்தியாவிலும் சர்வதேச விமான தளர்வை மறுபரிசீலனை செய்ய பிரதமர் நரேந்திரமோடி ஆலோசித்து வருகிறார். தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் இந்தத் தகவல் கிடைத்தவுடனேயே சென்னை விமான நிலையத்திற்கு சென்று தென்ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகள் அல்லது இந்த “ஒமிக்ரான்” வைரஸ் காலெடுத்துவைத்துள்ள நாடுகளில் இருந்துவரும் பயணிகளை கடுமையாக பரிசோதிக்கவேண்டும் என்று உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்றும் அலுவலரையும் விமான நிலையத்தில் இந்த பணிக்காக நியமித்துள்ளார்.

தடுப்பூசியின் செயல் திறனையும் இந்த புதிய வைரஸ் குறைத்துவிடும் என்பதால், இந்த புது வைரஸ் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஆனால், தடுப்பூசி இதன் தாக்குதலில் இருந்து ஓரளவுக்கு காப்பாற்றும் என்றாலும், முழுமையாக காப்பாற்றுவது முககவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும், அடிக்கடி கைகளை சோப்புபோட்டு கழுவிக்கொள்வதும்தான் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நிறைய பேர் முககவசம் அணியவில்லை என்பதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவலையோடு தெரிவித்தார்.

எனவே, மக்களுடைய கடமை என்பது தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். முககவசம் உள்பட பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்பதுதான். மத்திய அரசாங்கமும் “ஒமிக்ரான்” உள்ளே நுழைந்துவிடாமல், கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உத்தரவிடவேண்டும். நாட்டில் அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி போடவேண்டும். பூஸ்டர் டோஸ் போடுவதையும், சிறு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதையும் உடனடியாக தொடங்கவேண்டும்.

Next Story