நகர்ப்புற வீடு-மனைகளுக்கான பட்டாவின் முக்கியத்துவம்


நகர்ப்புற வீடு-மனைகளுக்கான பட்டாவின் முக்கியத்துவம்
x
தினத்தந்தி 21 July 2018 4:59 AM GMT (Updated: 21 July 2018 4:59 AM GMT)

வீடு அல்லது மனைகளுக்கான பத்திரம் என்பது ஒருவர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் பெயரில் சட்டத்துக்கு உட்பட்ட பரிமாற்றமாக உள்ள பதிவுத்துறை ஆவணமாகும்.

புதிதாக பதிவு செய்யப்படும் பத்திரங்களை ஆவணப்படுத்த சராசரியாக 15 நாட்களும், சொத்துக்கான பட்டா பெயர் மாற்றம் அல்லது உட்பிரிவு செய்வது ஆகியவற்றிற்கு 30 நாட்களும் ஆகலாம்.

பட்டாவுக்கான விண்ணப்பம்

நகர்ப்புறங்களுக்கு அருகில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அமைந்த குடியிருப்பு திட்டங்களில் வீடு அல்லது மனைகளை வாங்கும்போது முறையாக விண்ணப்பித்து, அதற்கான பட்டா பெயர் மாற்றம் செய்வது அல்லது உட்பிரிவு பட்டா பெறுவது போன்ற பணிகளை முடிக்கவேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நிலங்கள் வருவாய்த்துறை, ஆவணங்களில் அதன் முந்தைய பயன்பாட்டின் அடிப்படையில் கணக்கில் கொள்ளப்படும். ஒருவேளை அவை விவசாய நிலங்களாக இருக்கும் பட்சத்தில் அந்த பகுதிக்கு வருவாய் நிர்வாக ரீதியாக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தும்போது சிக்கல்கள் ஏற்படும்.

வரி விதிப்பு

மேலும், வருவாய்த்துறை ஆவண ரீதியாக விவசாய நிலமாக இருந்தால் வரி விதிப்பிலும் சிக்கல்கள் வரலாம். அதாவது, முறையாக உட்பிரிவு பட்டா பெறப்பட்டு, வீட்டு மனையாக இருப்பின் வீட்டு வரி மட்டும் விதிக்கப்படும். விவசாய நிலம் உள்ளிட்ட இதர நிலமாக இருக்கும் நிலையில் அதற்கான நில வரிதான் கணக்கில் கொள்ளப்படும். அது போன்ற நிலைகளில் வங்கி கடன் பெற விண்ணப்பம் செய்ய இயலாது.

சர்வே அளவீடுகள்

குறிப்பிட்ட இடத்தின் ஒரு பகுதியை வாங்குபவர் பெயருக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் நிலத்திற்கான நான்கு பக்க அளவுகள் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால், அந்த நிலம் முறையாக சர்வேயர்களால் அளக்கப்பட்டு, அதற்கான எல்லைகளை வரையறுத்து பட்டா அல்லது உட்பிரிவு பட்டா அளிக்கப்பட்டால் மட்டுமே, அதன் அளவுகளுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்கும்.

சட்ட அங்கீகாரம்

குறிப்பாக, பட்டா உட்பிரிவு மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட நிலத்திற்கான சிட்டா, அ-பதிவேடு, நில அளவை படம் (FMB) ஆகியவற்றிலும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். பத்திரத்தில் இருக்கும் நில அளவுகள் குறித்து, சர்ச்சை ஏற்படும்போது, வருவாய்த் துறை ஆவணங்கள் மட்டுமே முடிவானதாக கொள்ளப்படும். அதன் அடிப்படையில் வருவாய் மற்றும் சர்வே துறை ஆகியவை குறிப்பிட்ட நிலத்திற்கான அளவுகளை வரையறை செய்வதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் பெற்றவை என்பது கவனிக்கத்தக்கது. 

Next Story