2024 டி20 உலகக்கோப்பை; இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி..!


2024 டி20 உலகக்கோப்பை; இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி..!
x

இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்துடன் ஜூன் 5ம் தேதி மோத உள்ளது.

மும்பை,

2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் குறித்த தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதன்படி தொடரில் கலந்து கொள்ள இருக்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். லீக் சுற்று ஆட்டங்கள் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. முதலாவது ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோத உள்ளன.

இதில் இந்தியா குரூப் ஏ-வில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்துடன் ஜூன் 5ம் தேதி மோத உள்ளது.

குரூப் சுற்றில் இந்திய அணியின் போட்டி அட்டவணை :

ஜூன் 5 - இந்தியா - அயர்லாந்து.

ஜூன் 9 - இந்தியா - பாகிஸ்தான்.

ஜூன் 12 - இந்தியா- அமெரிக்கா.

ஜூன் 15 - இந்தியா - கனடா.

இந்த தொடர் நடைபெற உள்ள அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே நேர வேறுபாடு உள்ளது. இதனால் இந்திய அணியின் போட்டிகள் இந்திய நேரப்படி எப்போது நடைபெறும் என்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story