ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு போட்டி போடும் 3 அணிகள்..!!


ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு போட்டி போடும் 3 அணிகள்..!!
x

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.

துபாய்,

உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஐசிசி-யின் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பதற்கு ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே போட்டி நிலவுகிறது. தற்போது தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், பாகிஸ்தான் 2-வது இடத்திலும் மற்றும் இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.

இந்த தரவரிசை உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக மாற வாய்ப்பு உள்ளது. இந்திய அணி தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

1. ஆஸ்திரேலியா;

தற்போதைய தரவரிசை: 1

தற்போதைய புள்ளிகள்: 121

உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்கு 6 ஒருநாள் போட்டிகள் உள்ளன. அதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 போட்டிகளும், இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகளும் உள்ளன.

ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தோல்விகள் அடைந்தால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் நம்பர் 1 தரவரிசையைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். ஆனால் ஆஸ்திரேலிய அணி அவ்வாறு தோல்வி அடைந்தாலும் அதற்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது.

இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றால் உலகக்கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணியே முதலிடத்தில் தொடரும்.

2. பாகிஸ்தான்

தற்போதைய தரவரிசை: 2

தற்போதைய புள்ளிகள்: 118

ஆசியக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் வெற்றி மற்றும் ஒருவேளை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அதில் வெற்றி பெற்றால் அந்த அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறும். ஆனால் பாகிஸ்தானுக்கு ஆசிய கோப்பை தொடரை தவிர்த்து உலகக்கோப்பைக்கு முன் வேறு போட்டிகள் இல்லை. அதனால் அந்த அணி முதலிடத்திற்கு முன்னேறினாலும் சில சாதகமான அம்சங்கள் நடந்தால் மட்டுமே முதலிடத்தில் நீடிக்க முடியும்.

3. இந்தியா

தற்போதைய தரவரிசை: 3

தற்போதைய புள்ளிகள்: 115

இந்த மூன்று போட்டியாளர்களில் உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியே அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த அணிக்கு ஆசிய கோப்பையில் இலங்கை மற்றும் வங்காளதேச அணிகளுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டம் மற்றும் இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் ஆகியவை உள்ளன.

இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றும் பட்சத்தில், ஆஸிதிரேலியாவும், பாகிஸ்தானும் தங்கள் வரவிருக்கும் போட்டிகளில் தோல்வியடைந்தால், இந்திய அணி நம்பர் 1 இடத்தை அடைய முடியும். அதேவேளையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே நம்பர் 1 இடத்தில் நீடிக்க முடியும். இல்லையென்றால் ஆஸ்திரேலியா நம்பர் 1 இடத்தை பிடித்துவிடும்.


Next Story