ஒற்றை ஆளாக 404 ரன்கள்.....யுவராஜ் சிங்கின் 25 வருட கால சாதனையை தகர்த்த இளம் வீரர்..!


ஒற்றை ஆளாக 404 ரன்கள்.....யுவராஜ் சிங்கின் 25 வருட கால சாதனையை தகர்த்த இளம் வீரர்..!
x

image courtesy; twitter/@BCCIdomestic

கூச் பெஹர் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் கர்நாடகா அணிகள் மோதின.

பெங்களூரு,

இந்தியாவில் ஆண்டுதோறும் கூச் பெஹர் கோப்பை (19 வயதுக்கு உட்பட்டோர்) எனும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த வருடம் நடைபெற்ற அந்த தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய மும்பை மற்றும் கர்நாடகா அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.

கர்நாடகாவில் உள்ள கேஎஸ்சிஏ மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய மும்பை தனது முதல் இன்னிங்சில் 380 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடக அணிக்கு துவக்க வீரர் பிரகார் சதுர்வேதி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கார்த்திக் 50 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய சதுர்வேதி சதமடித்த நிலையில், மறுமுனையில் 2-வது விக்கெட்டுக்கு களமிரங்கிய ஹர்ஷில் தர்மணி தம்முடைய பங்கிற்கு 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக வந்த வீரர்களில் கார்த்திகேயா 72 ரன்களிலும், சமித் டிராவிட் 22 ரன்களிலும் அவுட்டாகி சென்றார்கள். ஆனாலும் ஒருபுறம் நங்கூரமாக நின்று மும்பைக்கு சிம்ம சொப்பனமாக மாறிய சதுர்வேதி சதமடித்தும் ஓயாமல் பிரமாதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதுர்வேதி 46 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 404 (638) ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக கூச் பெஹர் கோப்பை வரலாற்றின் இறுதிப்போட்டியில் 400 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையைஅவர் படைத்துள்ளார்.

மேலும் கூச் பெஹர் இறுதிப்போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற ஜாம்பவான் யுவராஜ் சிங் 25 வருட சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1999 இறுதிப்போட்டியில் எம்.எஸ். தோனி இடம் வகித்த பீகாருக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங் 358 ரன்கள் அடித்தது வெற்றி பெற வைத்ததே முந்தைய சாதனையாகும். தற்போது அந்த சாதனையை தகர்த்து சதுர்வேதி புதிய சாதனை படைத்துள்ளார்.


Next Story