'கிரிக்கெட்டில் கவனம் செலுத்துங்கள், பிட்ச்சில் அல்ல' - ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு ரோகித் சர்மா பதிலடி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் உள்ள 22 பேரும் திறமையான வீரர்கள் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
நாக்பூர்,
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது, இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடரை கைப்பற்றினால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்திய அணி இதை கைப்பற்ற தீவிரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்தியாவின் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைப்பு குறித்து விவாதித்து வருகின்றன. இதற்கு அந்த அணியின் முன்னாள் வீரர்களும் துணை நிற்கின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, "கிரிக்கெட்டில் கவனம் செலுத்துங்கள், பிட்ச்சில் அல்ல. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் உள்ள 22 பேரும் திறமையான வீரர்கள்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்த தொடர் மிகவும் சவாலானது என்றும், அதை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த அவர், ஆடும் லெவனை பொறுத்தவரையில் திறன் படைத்த வீரர்களையும் தவிர்க்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், நிச்சயம் அதில் துணிச்சலான முடிவை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.