"முகேஷ் குமார் அடுத்த ஷமி போல வருவார் என நம்புகிறேன்" -அஸ்வின்


முகேஷ் குமார் அடுத்த ஷமி போல வருவார் என நம்புகிறேன் -அஸ்வின்
x
தினத்தந்தி 26 Nov 2023 11:24 AM GMT (Updated: 26 Nov 2023 12:07 PM GMT)

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் அனைத்து இந்திய பவுலர்களும் ரன்களை வாரி வழங்கிய நிலையில் முகேஷ் குமார் மட்டும் 4 ஓவரில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தலாக பந்து வீசினார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதலாவது டி20 ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஜோஸ் இங்லிஷ் அதிரடி சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 209 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சூரியகுமார் 80 மற்றும் இஷான் கிசான் 58 ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தனர்.

ஆனாலும் திலக் வர்மா, அக்சர் பட்டேல் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்ததால் கடைசி நேரத்தில் தடுமாறிய இந்தியாவுக்கு கடைசி பந்தில் சிக்சருடன் ரிங்கு சிங் 22 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய முகேஷ் குமார் இந்தியாவின் அடுத்த ஷமி என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-

'ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் அனைத்து இந்திய பவுலர்களும் ரன்களை வாரி வழங்கிய நிலையில் முகேஷ் குமார் மட்டும் 4 ஓவரில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தலாக பந்து வீசினார். அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த அவர், அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஆரம்பத்தில் முகமது சிராஜ், ஷமி போல வருவார் என்று நான் நினைத்தேன். ஆனால் தற்போது முகேஷ் குமார் அப்படி வருவார் என்று கருதுகிறேன்.

முகேஷ் குமாரும் அவரைப் போலவே உயரத்தையும், மணிக்கட்டையும் பயன்படுத்தி சிறப்பாக பந்து வீசுகிறார். மேலும் அவரிடம் நேராக சரியான கோணத்தில் வீசும் திறமையும் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக பார்படாஸ் நகரில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் அபாரமாக செயல்பட்டார்" என்று கூறினார்.


Next Story