ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
x

இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐதராபாத்,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐதராபாத் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 277 ரன்கள் குவித்து சாதனை படைத்தடன் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனால் கடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சிடம் பணிந்தது. முந்தைய லீக் ஆட்டத்தில் மலைக்க வைக்கும் ரன் குவித்த ஐதராபாத் அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்களே எடுத்து ஏமாற்றம் அளித்தது.

அதே சமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் நடந்த தனது முதல் 2 ஆட்டங்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும், 63 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சையும் அடுத்தடுத்து சாய்த்தது. விசாகப்பட்டினத்தில் நடந்த கடந்த லீக் ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் வீழ்ந்தது.

இந்நிலையில் உள்ளூரில் தனது வெற்றி உத்வேகத்தை தொடர ஐதராபாத் அணியும், 3-வது வெற்றியை பெறும் குறிக்கோளுடன் சென்னை அணியும் இன்று களம் இறங்குகின்றன. ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 14 முறையும், ஐதராபாத் அணி 5 தடவையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story