பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ராஜினாமா


பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ராஜினாமா
x

பாகிஸ்தான் பெண்கள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பிஸ்மா மரூப் விலகி இருக்கிறார்.

லாகூர்,

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பிஸ்மா மரூப் 2017-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் நடந்த பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி, லீக் சுற்றில் இந்தியா உள்பட 3 அணிகளிடம் தோல்வி கண்டு அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பெண்கள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பிஸ்மா மரூப் விலகி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், 'எனது நாட்டு அணிக்கு கேப்டனாக இருந்ததை கவுரவமாக கருதுகிறேன். ஏற்ற இறக்கம் கொண்ட எனது கிரிக்கெட் பயணம் உற்சாகமானதாகும். ஐ.சி.சி.பெண்கள் சாம்பியன்ஷிப் மற்றும் 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு மேலாக இருக்கிறது.

எனவே அடுத்து வரும் போட்டிக்கு இளம் வீராங்கனைகளை தயார்படுத்த உதவிடும் வகையில் நான் பதவி விலக இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன். ஒரு வீராங்கனையாக தொடர்ந்து விளையாடி அணிக்கு எனது பங்களிப்பை அளிக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன்' என்றார்.

31 வயதான பிஸ்மா மரூப் 34 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அதில் அந்த அணி 16 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அவரது தலைமையில் 62 இருபது ஓவர் போட்டியில் ஆடி 27 ஆட்டங்களில் வென்றுள்ளது. பாகிஸ்தான் பெண்கள் அணியின் புதிய கேப்டன் யார்? என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story