டி20 உலகக்கோப்பை: கில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை... பண்டிற்கு பதிலாக அவரை தேர்வு செய்யலாம் - சைமன் டவுல்


டி20 உலகக்கோப்பை: கில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை... பண்டிற்கு பதிலாக அவரை தேர்வு செய்யலாம் - சைமன் டவுல்
x

இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ரோகித், விராட் ஆகியோர் டாப் ஆர்டரில் விளையாடத் தயாராக இருக்கும்போது கில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க அனைத்து வீரர்களும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். அது போன்ற சூழ்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள ரிஷப் பண்ட் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் ஒன்றரை வருடம் கழித்து விளையாடும் அவர் சென்னை மற்றும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்து நல்ல பார்முக்கு வந்துள்ளார். அதேபோல சுப்மன் கில்லும் டி20 உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டாப் ஆர்டரில் விளையாடத் தயாராக இருக்கும்போது சுப்மன் கில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று சைமன் டவுல் தெரிவித்துள்ளார். அதேபோல டி20 கிரிக்கெட்டில் இதுவரை தன்னை நிரூபிக்காத ரிஷப் பண்ட் நீண்ட காலம் கழித்து விளையாடுவதால் அவருக்கு பதிலாக கே.எல். ராகுலை கீப்பராக தேர்வு செய்யலாம் என தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"உலகக்கோப்பை அணி 15 பேருக்கு பதிலாக 18 பேராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும். அதில் பஞ்சாப்புக்கு எதிராக 89 ரன்கள் அடித்தாலும் இன்னும் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை. அணியை தேர்வு செய்யும்போது நீங்கள் பேட்டிங்கில் ஒரு எக்ஸ்ட்ரா டாப் ஆர்டர் பேட்ஸ்மேனை மட்டுமே தேர்ந்தெடுக்க விரும்புவீர்கள். ஒரு டாப் ஆர்டர் இடத்திற்கு மட்டுமே நீங்கள் வாய்ப்பு கொடுக்க முடியும். அது போன்ற சூழ்நிலையில் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய கே.எல். ராகுலை தேர்வு செய்வது போனஸ்.

எனவே கீப்பிங் செய்யக்கூடிய அவரை டாப் ஆர்டரில் பேக்-அப் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யலாம். ஆனால் சுப்மன் கில் விக்கெட் கீப்பிங் செய்வதில்லை. மேலும் ஜெய்ஸ்வால், ரோகித், விராட் இருக்கும் போது அவரை நீங்கள் தேர்வு செய்ய முடியாது. என்னுடைய அணியில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட இன்னும் நிறைய செய்ய வேண்டும். கீப்பிங் செய்வதால் பலராலும் அறியப்படும் அவர் மிடில் ஆர்டரில் 5-வது இடத்தில் விளையாட முடியும் என்பதை காண்பித்துள்ளார்.

ஆனால் இப்போதும் அவர் ஒரே பரிமாணத்தில் மட்டுமே அடிக்கக்கூடிய வீரராக உள்ளார். அவர் அற்புதமான டெஸ்ட் வீரர். ஆனால் டி20 கிரிக்கெட்டில் இன்னும் அவருடைய மாற்றத்தை நான் பார்க்கவில்லை. குறிப்பாக மைதானத்தின் ஒரு பகுதியில் மட்டுமே அவர் அடிக்கிறார் என்று நினைக்கிறேன்" என கூறினார்.


Next Story