டி20 உலகக் கோப்பை: ரஷீத் கான் போராட்டம் வீண்- ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி


டி20 உலகக் கோப்பை: ரஷீத் கான் போராட்டம் வீண்- ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி
x

ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

அடிலெய்டு,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தொடரில் இன்று குரூப்1-ல் நடைபெற்ற மிக முக்கியமான சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இதில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க ஆப்கானிஸ்தான் அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தவேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அதன்படி தொடக்க வீரராக களமிறங்கிய கேமரூன் கிரீன் 3 ரன்களிலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 25 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். ஸ்டீவ் ஸ்மித 4 ரன்னில் அவுட்டானார்.

பின்னர் மிட்சேல் மார்ஷ்- மேக்ஸ்வெல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி மிட்சேல் மார்ஷ் 30 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 32 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.

இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர் உஸ்மான் வந்த வேகத்தில் 2 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ரஹ்மானுல்லா குர்பாஸ்- இப்ராஹிம் சட்ரான் ஜோடி சேர்ந்தனர். இதில் குர்பாஸ் அதிரடியாக விளையாட துவங்கினார். ஆனால் அவரின் அதிரடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த குல்புதின் 23 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். பின்னர் வந்த கேப்டன் நபி 1 ரன்களில் அவுட்டாக ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அப்போது ஆப்கானிஸ்தான் 14.3 ஓவர்களில் 103 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது.

அந்த நிலையில் களமிறங்கிய ரஷீத் கான் ஆட்டத்தின் போக்கை மாற்றும் விதமாக அடுத்தடுத்து சில சிக்சர்களை பறக்கவிட போட்டியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி ஓவரில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 17 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ரஷீத் கான் 23 பந்துகளில் 48 ரன்கள் குவித்து இறுதிவரை போராடினார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மேலும் அந்த அணி 7 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாளை இலங்கை- இங்கிலாந்து அணிகள் போட்டியின் முடிவை பொறுத்து அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெறுமா? இல்லையா? என்பது முடிவாகும்.


Next Story