டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இன்று தொடக்கம் - கோவை-திருப்பூர் அணிகள் இடையே முதல் ஆட்டம்


டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இன்று தொடக்கம் - கோவை-திருப்பூர் அணிகள் இடையே முதல் ஆட்டம்
x

Image Courtesy : @TNPremierLeague twitter

·

11h

கோவையில் இன்று தொடங்கும் முதல் ஆட்டத்தில் கோவை- திருப்பூர் அணிகள் மோதுகின்றன.

கோவை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நகரத்தில் உள்ள வீரர்கள் மட்டுமின்றி, கிராமப்புற அளவிலான திறமையான வீரர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு வலுவான ஒரு அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 முறை கோப்பையை வென்றிருக்கிறது. இதில் கடந்த ஆண்டு இறுதிப்போட்டி மழையால் பாதியில் ரத்தானதால் கோவை கிங்சுடன் இணைந்து கோப்பையை பகிர்ந்து கொண்டதும் அடங்கும். தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் (இப்போது சேலம் ஸ்பார்டன்ஸ்) மதுரை பாந்தர்ஸ் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கையில் ஏந்தியுள்ளன.

இந்த நிலையில் 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. கோவை, சேலம், நத்தம் (திண்டுக்கல்), நெல்லை ஆகிய இடங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானம் தயாராகி வருவதால் இந்த தடவை சென்னையில் எந்த ஆட்டமும் கிடையாது.

அடுத்த மாதம் 12-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், பால்சி திருச்சி (முன்பு திருச்சி வாரியர்ஸ்), திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 8 அணிகள் களம் காணுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். பிளே-ஆப் சுற்று ஆட்டங்களுக்கு ரிசர்வ் டே (மாற்று நாள்) வைக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை வீரர்கள் ஒதுக்கீடு முறையில் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். வரலாற்றில் முதல் முறையாக இந்த தடவை ஏலம் விடப்பட்டனர். அதிகபட்சமாக சாய் சுதர்சன் 21.6 லட்சத்திற்கு கோவை கிங்சால் வாங்கப்பட்டார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கலக்கிய அவர் ஐ.பி.எல்.-ல் கூட ரூ.20 லட்சத்திற்கு தான் விலை போனார். இங்கு அதை விட அதிக தொகைக்கு ஏலம் போனது கவனிக்கத்தக்கது.

இதே போல் நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் கொண்டு வரப்படுகிறது. டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்த உள்ள முதல் இந்திய உள்நாட்டு தொடர் டி.என்.பி.எல். தான். மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதிமுறையும் (இம்பேக்ட் விதி) அறிமுகமாகிறது. இதன்படி இன்னிங்சில் பாதியில் ஒரு வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்க முடியும். மாற்று வீரர் பேட்டிங்கும் செய்யலாம். பந்தும் வீசலாம். தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதி, மேலும் பல திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க உதவும் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நட்சத்திர வீரர் என்.ஜெகதீசன் குறிப்பிட்டார்.

கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கோவை அணியில் கேப்டன் ஷாருக்கான், ஐ.பி.எல்.-ல் பிரமாதப்படுத்திய சாய் சுதர்சன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் எம்.சித்தார்த், எம்.முகமது, சுரேஷ்குமார் நம்பிக்கை அளிக்கிறார்கள். திருப்பூர் அணியில் விஜய் சங்கர், கேப்டன் சாய் கிஷோர், விஷால் வைத்யா, ஆர்.விவேக் மிரட்டக்ககூடியவர்கள். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கடந்த ஆண்டு இவ்விரு அணிகள் சந்தித்த ஆட்டத்தில் கோவை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்தியது நினைவு கூரத்தக்கது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

கோவை கிங்ஸ்: அதீக் உர் ரகுமான், திவாகர், கவுதம் தாமரை கண்ணன், ஹேம்சரண், கிரண் ஆகாஷ், எம்.முகமது, முகிலேஷ், ஓம் பிரகாஷ், ராம் அரவிந்த், சச்சின், சாய் சுதர்சன், ஷாருக்கான் (கேப்டன்), எம்.சித்தார்த், ஜதாவேத் சுப்பிரமணியன், எஸ்.சுஜய், சுரேஷ்குமார், வித்யூத், யுதீஸ்வரன்.

திருப்பூர் தமிழன்ஸ்: அஜித் ராம், பால்சந்தர் அனிருத், புவனேஸ்வரன், சதுர்வேத், எஸ்.கணேஷ், ராகுல் ஹரிஷ், ஏ.கருப்புசாமி, எஸ்.மணிகண்டன், முகமது அலி, பார்த்தசாரதி, ஜி.பெரியசாமி, எஸ்.ராதாகிருஷ்ணன், எம்.ராகவன், சாய் கிஷோர் (கேப்டன்), விஜய் சங்கர், திரிலோக் நாக், துஷார் ரஹேஜா, வெற்றிவேல், விஷால் வைத்யா, ஆர்.விவேக்.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.1.7 கோடியாகும். இதில் சாம்பியன் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.


Next Story