ஐ.பி.எல். கோப்பையை வெல்வது யார்..? இறுதிப்போட்டியில் குஜராத்-சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை


ஐ.பி.எல். கோப்பையை வெல்வது யார்..? இறுதிப்போட்டியில் குஜராத்-சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை
x

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இன்று இரவு குஜராத்-சென்னை அணிகள் ஆமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆமதாபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

மும்பை இந்தியன்ஸ் 3-வது இடமும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 4-வது இடமும் பிடித்தன. ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் முறையே 5 முதல் 10 வரையிலான இடங்களை பெற்றன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.



சுப்மன் கில்

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லீக் சுற்றில் 10 வெற்றியுடன் முதலிடத்தை பிடித்த குஜராத் அணி முதலாவது தகுதி சுற்றில் 15 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் வீழ்ந்தது. ஆனால் ஆமதாபாத்தில் நடந்த 2-வது தகுதி சுற்றில் 62 ரன் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை துவம்சம் செய்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

குஜராத் அணியை பொறுத்தமட்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் படுஜோராக இருக்கிறது. பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் சூப்பர் பார்மில் இருக்கிறார். ரன் குவிக்கும் எந்திரம் போல் செயல்படும் அவர் இதுவரை 3 சதம், 5 அரைசதம் உள்பட 851 ரன்கள் குவித்து நடப்பு தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (325 ரன்கள்), விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா (317 ரன்கள்), விஜய் சங்கர் (301 ரன்கள்), சாய் சுதர்சன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது ஷமி (28 விக்கெட்), ரஷித் கான் (27 விக்கெட்), மொகித் ஷர்மா (24 விக்கெட்) ஆகியோர் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முறையே முதல் 3 இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். நூர் அகமது, ஜோஷ் லிட்டில் ஆகியோரும் வலுசேர்க்கிறார்கள்.

ஆமதாபாத் மைதானம் சுப்மன் கில்லுக்கு ராசியானதாகும். இந்த சீசனில் இங்கு 2 சதம் அடித்து இருக்கும் அவர் இன்னும் 123 ரன்கள் எடுத்தால் ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக ரன் குவித்தவரான விராட்கோலியின் (973 ரன்கள்) சாதனையை தகர்க்க முடியும். போட்டி நடைபெறும் ஆமதாபாத் குஜராத் அணியின் சொந்த ஊர் என்பதால் ரசிகர்கள் ஆதரவு அந்த அணிக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும். இறுதி யுத்தத்தை காண சுமார் 1 லட்சம் ரசிகர்கள் திரளுவார்கள் என்பதால் ஸ்டேடியம் நிரம்பி வழியும் என்று தெரிகிறது. நடப்பு தொடரில் இங்கு ஆடிய 8 ஆட்டங்களில் அந்த அணி 5-ல் வெற்றி கண்டுள்ளது.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றில் 8 வெற்றியுடன் 2-வது இடம் பிடித்தது. சொந்த மண்ணில் நடந்த முதலாவது தகுதி சுற்றில் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி லீக் ஆட்டத்தில் அந்த அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்ததுடன் 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.



டிவான் கான்வே-ருதுராஜ்

சென்னை அணியின் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்கள் டிவான் கான்வே (6 அரைசதத்துடன் 625 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட் (4 அரைசதம் உள்பட 564 ரன்கள்) ஆகியோர் முதுகெலும்பாக உள்ளனர். அவர்கள் அளிக்கும் தொடக்கத்தை பொறுத்தே அந்த அணியின் ஸ்கோர் வலுவான நிலையை எட்டும். மிடில் வரிசையில் ஷிவம் துபே (3 அரைசதத்துடன் 386 ரன்கள்), ரஹானே ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் துஷார் தேஷ்பாண்டே (21 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (19 விக்கெட்), பதிரானா, தீபக் சாஹர், தீக்ஷனா ஆகியோர் அச்சுறுத்தல் அளிக்ககூடியவர்கள். எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காமல் அணியை நேர்த்தியாக வழிநடத்தக்கூடிய டோனியின் தலைமை சென்னைக்கு பெரும் பலமாக இருக்கும். 41 வயதான டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருப்பதால் அவருக்காக கோப்பையை வெல்ல வீரர்கள் வரிந்து கட்டுவார்கள்.

ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் குஜராத்தும், 1-ல் சென்னையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் சந்தித்த 2 ஆட்டங்களில் தலா ஒரு வெற்றி பெற்றதும் இதில் அடங்கும்.

போட்டி நடைபெறும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான ஆமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு உகந்ததாகும். இதனால் இந்த ஆடுகளத்தில் ரன் மழைக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த சீசனில் இங்கு நடந்த 8 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணி 5-ல் வெற்றி கண்டுள்ளது.



பரிசுத் தொகை எவ்வளவு?

சென்னை அணி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அதிக முறை (5 தடவை) கோப்பையை வென்ற மும்பையின் சாதனையை சமன் செய்ய வியூகம் அமைக்கும். அதேநேரத்தில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாகி முதல் முயற்சியிலேயே கோப்பையை வென்று அசத்திய குஜராத் அணி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை தனதாக்கி சாதனை படைக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த போட்டிக்கான பரிசுத் தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், கடந்த ஆண்டை போலவே கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.13 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிகிறது. இறுதிப்போட்டிக்கு முன்னதாக கண்கவர் கலைநிகழ்ச்சி அரங்கேறுகிறது.

இரவு 7.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ரஷித் கான், ராகுல் திவேதியா, நூர் அகமது, முகமது ஷமி, மொகித் ஷர்மா.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ஷிவம் துபே, ரஹானே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, தீக்ஷனா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.


Next Story