பாகிஸ்தான் பந்து வீச்சில் தடுமாற்றம் ஏன்..? - சுப்மன் கில் விளக்கம்
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
கொழும்பு,
ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து சூப்பர் 4 சுற்றின் ஆட்டங்கள் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றில் இந்தியா -பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் மோதுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் இதுபோன்ற பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி விளையாடாதபோது அது முக்கிய போட்டிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நாங்கள் வேறு சில அணிகளுக்கு எதிராக விளையாடுவது போல் பாகிஸ்தானுக்கு எதிராக அடிக்கடி விளையாடுவதில்லை. அவர்களின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக உள்ளது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். மேலும் இதுபோன்ற பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி விளையாடாதபோது அது முக்கிய போட்டிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் வித்தியாசமான வேகப்பந்து வீச்சாளர்கள், அவர்களுக்கென்று தனி சிறப்புகள் உள்ளன. ஷாகீன் அப்ரிடி பந்தை அதிக அளவில் ஸ்விங் செய்கிறார். நசீம் ஷா ஆடுகளத்தில் இருந்து கிடைக்கப்பெறும் உதவியுடன் சீரான வேகத்தில் வீசுகிறார். அவர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு சவால்களை முன்வைக்கின்றனர்.
கடந்த முறை போன்று இல்லாமல் தொடக்க வீரர்களாக நாங்கள் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
பவர்பிளேவில் ரோகித்துடன் இணைந்து விளையாட நான் விரும்புகிறேன். நாங்கள் இருவரும் சற்று வித்தியாசமானவர்கள். நாங்கள் எப்படி ஷாட்களை மேற்கொள்கிறோம், சூழ்நிலைகளை சமாளிக்கிறோம் என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது. இதுவே எதிரணி எங்களை கட்டுப்படுத்துவதில் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
பாகிஸ்தான் போட்டிக்கு எதிரான அழுத்தம் என்பது மற்ற போட்டிகளில் இருந்து சற்று வித்தியாசமானது. நீங்கள் எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் அழுத்தம் இருக்கும். அது ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணியாக இருந்தாலும் சரி, எங்களிடம் அதே அளவு அழுத்தம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.