அரைஇறுதியை எட்டுமா இங்கிலாந்து? இலங்கையுடன் இன்று மோதல்


அரைஇறுதியை எட்டுமா இங்கிலாந்து? இலங்கையுடன் இன்று மோதல்
x

image courtesy: England Cricket twitter

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சிட்னி,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1-ல் இன்று (சனிக்கிழமை) சிட்னியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 5 புள்ளிகள் (2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை) பெற்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறி விடும். தோல்வி அடைந்தால் மூட்டையை கட்டும்.

அதே சமயம் 4 புள்ளியுடன் உள்ள (2 வெற்றி, 2 தோல்வி) தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்து விட்டது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அழுத்தம் இன்றி விளையாடுவார்கள். தொடரை வெற்றியோடு நிறைவு செய்யும் முனைப்புடன் அவர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த ஆட்டத்தில் இலங்கை வாகை சூடினால், இங்கிலாந்து வெளியேறுவது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு அரைஇறுதிக்கான கதவு திறக்கும். அதனால் இலங்கை வெற்றிக்காக ஆஸ்திரேலிய ரசிகர்களும் பிரார்த்திப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனாலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணியாக திகழும் இங்கிலாந்தை இலங்கை சமாளிக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 13 இருபது ஓவர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 9-ல் இங்கிலாந்தும், 4-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. 20 ஓவர் கிரிக்கெட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணி, இங்கிலாந்தை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஓரளவு ஒத்துழைக்கும் என்பதால் ஹசரங்கா, தீக்‌ஷனா ஆகியோரின் சுழல் தாக்குதலை இலங்கை அதிகமாக நம்பி இருக்கிறது. போட்டிக்கு மழை ஆபத்து இல்லை.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story