ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை ஆக்கி: முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி!


ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை ஆக்கி: முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி!
x

image courtesy; twitter/ @TheHockeyIndia

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஜெர்மனி அணியுடன் விளையாட உள்ளது.

சான்டியாகோ,

ஜூனியர் பெண்களுக்கான 10-ஆவது உலகக்கோப்பை ஆக்கி போட்டி, சிலியில் நேற்று தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி, 12 நாள்கள் நடைபெற்று டிசம்பர் 10-ஆம் தேதி நிறைவடைகிறது.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் குரூப் "சி'-யில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் கனடா அணியுடன் நேற்று மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அடுத்தடுத்து கோல்களை போட்டு தள்ளியது. முழுநேர ஆட்ட முடிவில் இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் கனடா அணியை ஊதித்தள்ளியது.

இந்திய அணி தரப்பில் மும்தாஜ் கான் 4 கோல்களும், அன்னு மற்றும் தீபிகா தலா 3 கோல்களும், நீலம் மற்றும் டிபி மோனிகா டோப்போ தலா 1 கோலும் அடித்தனர்.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஜெர்மனி அணியுடன் விளையாட உள்ளது.


Next Story