"ஜார்கண்டில் சில நல்ல பயிற்சிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன"- இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் பேட்டி


ஜார்கண்டில் சில நல்ல பயிற்சிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன- இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் பேட்டி
x

image courtesy; PTI

பாரீஸ் ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி போட்டிக்கான தகுதி சுற்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வருகிற 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.

ராஞ்சி,

பாரீஸ் ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி போட்டிக்கான தகுதி சுற்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வருகிற 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஜெர்மனி, ஜப்பான், சிலி, செக்குடியரசு அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா, இத்தாலி, அமெரிக்கா, நியூசிலாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்திய அணி தனது முதலாவது லீக்கில் வரும் 13-ந் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடரில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறும் ஜார்கண்ட் மைதானத்தில், இதற்கு முன்னர் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து இந்திய அணியின் கேப்டன் சவிதா கூறுகையில்,' நமது அணி மிகவும் உற்சாகமாக உள்ளது. ஜார்கண்டில் சில நல்ல பயிற்சிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. குறிப்பாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது அணிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது. நாங்கள் இதற்காக கடுமையான பயிற்சிகளுடன் தயாராகி உள்ளோம். மேலும் கடந்த காலங்களில் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீராங்கனைகள் அணியில் உள்ளார்கள். அவர்கள் மூலம் இந்த தொடரில் எவ்வாறு செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்பதை நாங்கள் கற்றுள்ளோம். இது எங்களுக்கு வாழ்வா சாவா ஆட்டம் ஆகும். நாங்கள் அதற்கு தயாராக உள்ளோம்' என்று கூறினார்.


Next Story