ஆசிய மல்யுத்த தகுதி சுற்று: ஒலிம்பிக் இடத்தை உறுதி செய்தார் வினேஷ் போகத்
ஆசிய மல்யுத்த தகுதி சுற்றில் வினேஷ் போகத் உள்பட 3 இந்திய வீராங்கனைகள் வெற்றி பெற்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்தனர்.
பிஷ்கேக்,
ஒலிம்பிக் போட்டி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடக்கிறது. ஒலிம்பிக் மல்யுத்தத்துக்கான ஆசிய மண்ட தகுதி சுற்று கிர்கிஸ்தானின் பிஷ்கேக் நகரில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று பெண்கள் பிரிவில், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் வினேஷ் போகத் 50 கிலோ உடல் எடைப்பிரிவில் வீறுநடை போட்டார். முதல் சுற்றில் 10-0 என்ற புள்ளி கணக்கில் மிரான் சியோனையும் (தென் கொரியா), கால்இறுதியில் 2-0 என்ற கணக்கில் சமனங் டிட்டையும் (கம்போடியா) தோற்கடித்து அரைஇறுதியை எட்டினார்.
அரைஇறுதியில் வினேஷ் போகத், கஜகஸ்தானின் லாரா கானிக்சியை எதிர்கொண்டார். தாக்குதல் பாணியை கையாண்டு எதிராளியை மடக்கிய வினேஷ் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இறுதி சுற்றை எட்டியதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் இடத்தை வினேஷ் போகத் உறுதி செய்தார். 29 வயதான வினேஷ், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான போராட்டம் காரணமாக சில மாதங்கள் பயிற்சியை இழந்தார். ஆனாலும் போட்டிக்கு தீவிரமாக தயாரான அவர், இந்த தொடரில் தனக்கு அமைந்த எளிதான எதிராளிகளை சரியாக பயன்படுத்தி கொண்டார். இதன் மூலம் அவர் 3-வது முறையாக ஒலிம்பிக்கில் களம் காண உள்ளார்.
76 கிலோ எடைப்பிரிவில் முதல் 3 ரவுண்டில் ஹவாங், டேவனாசன் என்க் அமர், ஜூவான் வாங் ஆகியோரை போட்டுத் தாக்கிய 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியனான இந்தியாவின் ரித்திகா, அரைஇறுதியில் ஹய் டிஸ் சங்கை (சீனதைபே) 7-0 என்ற கணக்கில் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன் ஒலிம்பிக் கோட்டாவையும் உறுதி செய்தார்.
இதே போல் 57 கிலோ பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 10-0 என்ற கணக்கில் சோபிரோவாவை (உஸ்பெகிஸ்தான்) வீழ்த்தி இறுதிப்போட்டியோடு ஒலிம்பிக் வாய்ப்பையும் தட்டிச் சென்றார். இவர் 2021-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார்.
62 கிலோ எடைப்பிரிவில் மட்டும் ஏமாற்றம் ஏற்பட்டது. இதன் அரைஇறுதியில் இந்தியாவின் மன்சி 0-6 என்ற கணக்கில் ஹியோங் முன்னிடம் (வடகொரியா) பணிந்தார்.