ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தும் வாய்ப்பை நீரஜ் சோப்ராவுக்கு அளித்திருக்க வேண்டும் - அஞ்சு ஜார்ஜ்
பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தும் வாய்ப்பை நீரஜ் சோப்ராவுக்கு அளித்திருக்க வேண்டும் என்று அஞ்சு ஜார்ஜ் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பாரீசில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தொடக்க விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் மூத்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சரத்கமலுக்கு இது 5-வது ஒலிம்பிக் போட்டியாகும்.
இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் உலக தடகளத்தில் தங்கம் வென்று சரித்திரம் படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தும் வாய்ப்பை அளித்திருக்க வேண்டும் என்று முன்னாள் தடகள வீராங்கனையும், இந்திய தடகள சங்கத்தின் துணைத் தலைவருமான அஞ்சு ஜார்ஜ் கூறியுள்ளார்.
'இந்திய ஒலிம்பிக் சங்கம், 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்தி செல்வதற்கு நமது தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பெயரை பரிசீலனை செய்யாதது ஆச்சரியம் அளிக்கிறது. டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட தேசிய விளையாட்டு சங்கங்கள் இன்னும் ஒலிம்பிக் போட்டிக்கான தங்கள் அணிையயே அறிவிக்காத நிலையில் சரத்கமல் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்' என்று அஞ்சு குறிப்பிட்டுள்ளார்.