தமிழ்நாடு கைப்பந்து லீக் போட்டி; சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது - 6 அணிகள் பங்கேற்பு


தமிழ்நாடு கைப்பந்து லீக் போட்டி; சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது - 6 அணிகள் பங்கேற்பு
x

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் முதல்முறையாக புரோ லீக் பாணியில் தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி நடத்தப்படுகிறது. இளம் வீரர்களின் திறமையை வளர்க்கவும், தேசிய அணியில் இடம் பெறும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்குடனும் தொடங்கப்படும் இந்த போட்டி சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் சென்னை ராக்ஸ்டார்ஸ், விழுப்புரம் சூப்பர் கிங்ஸ், கிருஷ்ணகிரி புல்ஸ், விருதுநகர் கிங் மேக்கர்ஸ், குமரி போனிக்ஸ், கடலூர் வித் அஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகளை முறையே ஆர்.வி.எம்.ஏ. ராஜன், டாக்டர் பொன் கவுதம சிகாமணி எம்.பி., ஏ.டி.கமலாசன், எம்.பி.செல்வகணேஷ், ஏ.சிவரமேஷ், ஜி.வெங்கடேசன் ஆகியோர் வாங்கி உள்ளனர். தலைமை பயிற்சியாளர்களாக ஹாரூன்கான் (ஐ.ஓ.பி), மனோகரன் (இந்தியன் வங்கி), தினகர் (ஐ.ஓ.பி.), மங்களம் ஜெயபால் (மின் வாரியம்), சிவபாலன் (சுங்க இலாகா), பழனியாண்டி (போலீஸ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அணியிலும் 14 வீரர்கள் இடம் பெறுவார்கள். இதில் கல்லூரியில் படிக்கும் 7 பேரும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 4 பேரும், பள்ளியில் படிக்கும் ஒருவரும், மற்ற மாநிலத்தை சேர்ந்த 2 பேரும் அங்கம் வகிப்பார்கள். வீரர்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வீதம் ஊதியமாக வழங்கப்படும்.

இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியை எட்டும்.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.5 லட்சமும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.3 லட்சமும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.2 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மேலும் சிறந்த வீரர்களுக்கு பரிசுத் தொகை அளிக்கப்படும்.

இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் அறிமுக நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு கைப்பந்து லீக் கமிட்டி சேர்மன் ஆர்.அர்ஜூன் துரை, தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், பொருளாளர் எம்.பி.செல்வகணேஷ், துணை சேர்மன் எம்.அழகேசன், இணை செயலாளர் பி.கலைசெல்வன், செயல் துணைதலைவர் ஆர்.கே.துரைசிங், ஒருங்கிணைப்பாளர் சி.ஸ்ரீகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story