ஒலிம்பிக் போட்டிக்கு 3-வது முறையாக தகுதி பெறுகிறார் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு


ஒலிம்பிக் போட்டிக்கு 3-வது முறையாக தகுதி பெறுகிறார் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு
x

image courtesy:PTI 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக குறைந்தது 2 தகுதி சுற்றிலாவது கலந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறையை மீராபாய் சானு நிறைவு செய்து விட்டார்.

புகெட்,

உலகக் கோப்பை பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தின் புகெட் நகரில் நடந்து வருகிறது. பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்குரிய தகுதி சுற்றான இதில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு களம் கண்டார். அவர் ஸ்னாட்ச் முறையில் 81 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 103 கிலோ என்று மொத்தம் 184 கிலோ எடை தூக்கி தனது 'பி' பிரிவில் 3-வது இடத்தை பிடித்தார். முன்னாள் உலக சாம்பியனான மீராபாய் சானு கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளப்பதக்கம் வென்றவர் ஆவார். தற்போது 49 கிலோ பிரிவு தகுதி சுற்றுக்கான தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக குறைந்தது 2 தகுதி சுற்றிலாவது கலந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறையை மீராபாய் சானு நிறைவு செய்து விட்டார். பளுதூக்குதல் தகுதி சுற்று வருகிற 28-ந்தேதி முடிவடைகிறது. அப்போது ஒவ்வொரு எடைப் பிரிவிலும் தரவரிசையில் டாப்-10 இடத்திற்குள் இருப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதன் மூலம் மீராபாய் சானு ஒலிம்பிக் போட்டிக்கு 3-வது முறையாக தகுதிபெறுவது உறுதியாகி விட்டது.

மணிப்பூரைச் சேர்ந்த 29 வயதான மீராபாய் கூறுகையில், 'பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே எனது இலக்கு. இப்போது ஏறக்குறைய அதை எட்டி விட்டேன். காயத்தில் இருந்து குணமடைந்த பிறகு திரும்பிய இந்த போட்டியில் எனது செயல்பாடு திருப்தி அளித்தது. திடமான நம்பிக்கையுடன் இந்த போட்டியில் இருந்து கிளம்புகிறேன்' என்றார்.


Next Story