வங்கிகளில் கோரப்படாமல் இருக்கும் ரூ.35 ஆயிரம் கோடி


வங்கிகளில் கோரப்படாமல் இருக்கும் ரூ.35 ஆயிரம் கோடி
x

அனைவருக்கும் வங்கி கணக்கு இருக்கவேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் மிக தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. சாதாரண ஏழை-எளிய மக்கள் கூட வங்கி கணக்கு தொடங்கினால்தான், அவர்களுக்கு அரசின் பல உதவிகள் கிடைக்கும். எந்த சேவை என்றாலும் வங்கிகள் மூலமாகத்தான் பணபரிமாற்றம் செய்யப்படுவதால், வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள் வெகு குறைவு என்ற நிலையே இருக்கிறது. இதுதவிர சேமிப்பு என்றாலும், வர்த்தக பரிமாற்றம் என்றாலும் வங்கி கணக்கு இல்லாமல் எதுவும் முடியாது. மேலும் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் எந்த பரிமாற்றமும் 'செக்' அல்லது வங்கி இணையவழி மூலமாகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு மக்கள் வங்கிகளில் போட்டு வைத்துள்ள 'டெபாசிட்'களில் 9.87 கோடி கணக்குகளில் உள்ள ரூ.35 ஆயிரத்து 12 கோடி அந்த கணக்குதாரர்களால் கோரப்படாமல் இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு, எழுத்துப்பூர்வமான பதிலை மத்திய நிதித்துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு, ஆண்டு இந்த தொகையும், கணக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. ஒரு 'டெபாசிட்' 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருந்தால் ரிசர்வ் வங்கி டெபாசிட்தாரர் கல்வி-விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படுகிறது. இந்த நிதி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இந்த தொகையை வைத்து ரிசர்வ் வங்கி என்ன செய்யும்? என்பதற்கு தெளிவான விளக்கம் இல்லை. வங்கிகளில் 'டெபாசிட்' செய்தவர்கள் காலமாகியிருந்தாலோ அல்லது அவர் தனது சட்டப்பூர்வ வாரிசை குறிப்பிடாமல் இருந்தாலோ அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு இந்த வங்கி கணக்கு பற்றி தெரியாமல் இருந்தாலோ, கோரப்படாமல் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. கணக்கு வைத்திருப்பவர் வாரிசு அதாவது நாமினி பெயரை குறிப்பிடவில்லை என்பதை காரணமாக கூறமுடியாது. ஏனெனில் வங்கி கணக்கை தொடங்கும்போதே சட்டப்பூர்வ வாரிசு பெயர் விவரங்களை வங்கிகள் கேட்டு பெற்றிருக்கவேண்டியது அவர்கள் கடமை.

மேலும் வங்கிகளில் 'டெபாசிட்' வைத்து இருந்தவர் மரணம் அடையும் நேரத்தில், அவரது கணக்கில் குறைந்த அளவு தொகை இருக்கும் பட்சத்தில் அதை கோர பல சட்டப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய நிலையில் இந்த தொகையை பெறுவதற்கு இவ்வளவு கஷ்டப்படவேண்டுமா... என்ற உணர்வில் பலர் அதை கோராமல் விட்டு விடுகிறார்கள். எனவே இதை எளிமைப்படுத்த வேண்டும். வங்கிகளுக்கு அருகில்தான் அந்த கணக்குகளை வைத்து இருந்தவர்களின் வீடு, வணிக நிறுவனங்கள் இருந்திருக்கும். எனவே சற்று முயற்சி செய்தால் கண்டுபிடித்துவிடமுடியும். இப்போது ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் ஆலோசனையை கூறியுள்ளது.

ஏதாவது ஒரு வங்கி கணக்கில் 2 ஆண்டுகள் பரிமாற்றம் செய்யப்படவில்லை என்றால் அவர்களையோ, அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளையோ கண்டுபிடிக்க சிறப்பு முயற்சிகளை எடுக்கவேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அதை திருப்பிக்கட்ட தாமதம் ஏற்பட்டால் எடுக்கும் கடும் நடவடிக்கைகளைப்போல கோரப்படாமல் இருக்கும் ரூ.35 ஆயிரம் கோடியையும் திருப்பி அவர்களிடமோ, அவர்கள் குடும்பத்தினரிடமோ கொடுக்க வங்கிகள் வேகமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ரிசர்வ் வங்கியும் விரைவில் ஒரு இணையதளத்தை உருவாக்கி, அதில் இவ்வாறு கோரப்படாமல் இருக்கும் கணக்குதாரர்கள் விவரங்களை தெரிவிக்க எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது. ஆக, 10 ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டியது இல்லை.


Next Story