தலையங்கம்: இனி பெண் கல்வி புத்துயிர் பெறும்!


தலையங்கம்: இனி பெண் கல்வி புத்துயிர் பெறும்!
x

“கேடில் விழுச்செல்வம் கல்வி; ஒருவற்கு மாடல்ல மற்றை யவை” என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் ‘கல்வி’ என்ற அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார், அய்யன் திருவள்ளுவர். ‘ஒருவருக்கு அழிவில்லாத சீரிய செல்வமாக அமைவது கல்விதான்.

கல்வியொழிந்த பிறவெல்லாம் நிலைத்த செல்வங்கள் ஆகா' என்பதுதான் இதன் பொருள். அந்த வகையில், கல்வி வளர்ச்சிதான் மற்ற எல்லா வளர்ச்சிகளுக்கும் அடிப்படையாகும். தமிழ்நாட்டில் கல்விக்கண் திறந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் பட்டி தொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்களை திறக்கவேண்டும் என்ற லட்சிய வேட்கையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களை திறந்தார். உயர் கல்வியை மேம்படுத்த, கருணாநிதி தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களை உருவாக்கினார். பள்ளிக்கூடங்களில் ஏழை-எளிய மாணவர்கள் சேரவேண்டும் என்பதற்காக, சத்துணவு திட்டத்தையும், அனைவரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேரவேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு முழுவதும் என்ஜினீயரிங் கல்லூரிகளையும் எம்.ஜி.ஆர். கொண்டுவந்தார்.

மேல்நிலை கல்வியில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 2001-2002-ம் ஆண்டில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கிவைத்தார். மருத்துவக் கனவை அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் உறுதிப்படுத்தும் விதமாக, மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தார்.

இதுபோல, தந்தை பெரியாரின் கனவை நனவாக்க அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவிகள், கல்லூரி மற்றும் உயர்படிப்புகளில் சேர்ந்தால் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்ற அற்புதமான திட்டத்தை கொண்டுவந்து, இந்த ஆண்டு முதல் அமல்படுத்தி, அழியாத சாதனையை படைத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் என மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாதம் ஆயிரம் ரூபாய், அவர்கள் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள், ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இதற்காக, இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் நோக்கம் மற்றும் இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவிகள் தவிர, தனியார் பள்ளிக்கூடங்களில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்து, பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். முதலாம் ஆண்டு மாணவிகள் தவிர, முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவிகளும், இரண்டாம் ஆண்டிலிருந்து 3-ம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவிகளும் தொழிற்கல்வியைப் பொறுத்தமட்டில், 3-ம் ஆண்டிலிருந்து 4-ம் ஆண்டுக்கு செல்லும் மாணவிகளும், மருத்துவக் கல்வியைப் பொறுத்தமட்டில் 4-ம் ஆண்டிலிருந்து 5-ம் ஆண்டு செல்லும் மாணவிகளும் பயனடையலாம் என்று வெளியிட்டிருப்பது, இந்த அறிவிப்புக்கு மேலும் மெருகூட்டுகிறது.

தமிழ்நாட்டில் இனி அரசு பள்ளிக்கூட மாணவிகள், உயர் கல்வியை தொடர மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அதேபோல், அரசு பள்ளிக்கூடங்களில், தங்கள் பெண் குழந்தைகளை சேர்க்க பெற்றோரும் ஆவலோடு இருப்பார்கள். இனிதான் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள், தங்கள் திறமையை அர்ப்பணிப்பு உணர்வோடு வெளிப்படுத்தவேண்டும். பிறக்கும்போது எந்த குழந்தையும் முட்டாளாக பிறப்பதில்லை. ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதில்தான், அவர்கள் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஒளிருகிறார்கள். இனி அரசு பள்ளிக்கூட மாணவர்களை அறிவாற்றல்மிக்க நாளைய நட்சத்திரங்களாக மாற்றும் தலையாய கடமை ஆசிரியர்களிடம்தான் இருக்கிறது.


Next Story