கடும் பேரிடராக அறிவித்து கணிசமாக நிதி ஒதுக்க வேண்டும்


கடும் பேரிடராக அறிவித்து கணிசமாக நிதி ஒதுக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Jan 2024 9:00 AM GMT (Updated: 2 Jan 2024 9:24 AM GMT)

மத்திய அரசாங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ரூ.900 கோடி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது ஆண்டுதோறும் அனைத்து மாநிலங்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியாக மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பயன்படுத்த மத்திய அரசாங்கம் வழங்கி வருகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பெருமழை, தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்திருக்கிறது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி, ஏறத்தாழ 57 பேர் உயிரிழந்துள்ளனர். கால்நடை இழப்பு கணக்கில் அடங்காதது. வீடுகள், குடிசைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. ஏற்கனவே, கடந்த மாதம் 4-ந்தேதி 'மிக்ஜம்' புயல் - வெள்ளத்தினால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்தன. இரு இடங்களில் நடந்த மழை வெள்ள பாதிப்புகளையும் மத்திய குழு பார்வையிட்டு சென்றிருக்கிறது.

சென்னை உள்பட 4 மாவட்ட பாதிப்புகளுக்கு, தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடியும் வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசாங்கத்தை கோரியுள்ளார். தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், முதற்கட்ட சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அவசர நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வற்புறுத்தியுள்ளார். ஆக, இப்போதைக்கு மொத்தம் ரூ.21,692 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், தமிழக மழை வெள்ள பாதிப்புகளை கடும் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதும் தமிழக அரசின் கோரிக்கை.

மத்திய அரசாங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ரூ.900 கோடி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது ஆண்டுதோறும் அனைத்து மாநிலங்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியாக மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பயன்படுத்த மத்திய அரசாங்கம் வழங்கி வருகிறது. இதற்காக ஒரு தொகையை நிர்ணயித்து, 75 சதவீதத்தை மத்திய அரசாங்கம் வழங்கும். மீதி 25 சதவீதத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு மாநில பேரிடர் நிதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை ரூ.1,200 கோடி. அதில் 75 சதவீதமான ரூ.900 கோடியைத்தான் மத்திய அரசாங்கம் தந்திருக்கிறது.

இப்போதைய கடும் மழை வெள்ள பாதிப்பை மத்திய அரசாங்கம் கடும் பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிதியில் இருந்து கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். ஏற்கனவே, 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, தமிழக அரசு சார்பில் ரூ.25,912 கோடியே 45 லட்சம் நிதி கோரப்பட்ட நிலையில், மத்திய அரசாங்கம் ஒதுக்கியது ரூ.1,737 கோடியே 65 லட்சம்தான். அதுபோன்று இப்போதும் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டால், அதைவைத்து ஒன்றுமே செய்யமுடியாது. எனவே, இந்த பேரழிவை கடும் பேரிடராக அறிவித்து, கணிசமான தொகையை மத்திய அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின், தமிழக அரசின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்தநிலையில், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெலிபோன் செய்து, வரலாறு காணாத பெருவெள்ளம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, முதல்-அமைச்சர் அவரிடம், விளக்கமாக கூறி மத்திய அரசாங்கம் உடனடியாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த பிரதமர் நரேந்திரமோடி, இந்த இரட்டை பேரிடரில் இருந்து தமிழ்நாடு மீண்டெழ மத்திய அரசாங்கம் உதவும் என்று உறுதியளித்தார். எனவே, கடந்த காலங்கள் போல் அல்லாமல், இந்த முறை மத்திய அரசாங்கம் தாராளமாக நிதியுதவி அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.


Next Story