இடைக்கால பட்ஜெட் இனிமையாக இருக்குமா?


இடைக்கால பட்ஜெட் இனிமையாக இருக்குமா?
x
தினத்தந்தி 31 Jan 2024 12:30 AM GMT (Updated: 31 Jan 2024 12:30 AM GMT)

இடைக்கால பட்ஜெட்டில் நல்ல அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பொதுவாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார். அடுத்த நாள் நிதி மந்திரி பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அந்த வகையில், இன்று இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். சம்பிரதாயப்படி நாளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவேண்டும். ஆனால், தேர்தல் நடக்க இருப்பதால் அவரால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இந்த நிதி ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும் சூழ்நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கான அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் வகையில் இடைக்கால பட்ஜெட்டைத்தான் தாக்கல் செய்ய முடியும்.

அந்த வகையில், இந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் அவர் வரலாறு படைக்கிறார். தொடர்ந்து அவர் தாக்கல் செய்யப்போகும் 6-வது பட்ஜெட் இது. இதுவரை தொடர்ந்து 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தது முன்னாள் பிரதமரான மொரார்ஜி தேசாய்தான். அவரது சாதனையை இப்போது நிர்மலா சீதாராமன் சமன் செய்ய உள்ளார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 2-வது முறையாக பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராகக் கொண்டு ஆட்சி அமைத்தபோது, நிதி மந்திரி பொறுப்பை நிர்மலா சீதாராமன் ஏற்றுக்கொண்டார். அந்த ஆண்டு ஜூலை மாதம் தன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது முதல் ஆண்டுதோறும் பட்ஜெட்டை தாக்கல் செய்து, இந்த ஆண்டு நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒரு சாதனை படைக்க உள்ளார்.

பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அளவில் எந்த அறிவிப்பும் இருக்காது. அரசின் மிகை செலவுக்கான நிதிநிலை அறிக்கையாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், தேர்தலை சந்திக்கப்போகிற சூழ்நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் வெளியிடப்பட்ட முன்னுதாரணமும் இருக்கிறது. 2004-ம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜஸ்வந்த்சிங் நிதி மந்திரியாக இருந்தபோதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் 2009-ல் பிரணாப்முகர்ஜி நிதி மந்திரியாக இருந்தபோதும், 2014-ல் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தபோதும் இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கு பலன் அளிக்கும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அவ்வளவு ஏன், கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் நிதி மந்திரியாக இருந்த பியூஷ் கோயல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் 'பி.எம்.கிசான்' என்று கூறப்படும் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி, வருமான வரி தள்ளுபடி உயர்வு, முறை சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்ஷன் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார். ஆக, இடைக்கால பட்ஜெட் மக்களை மகிழ்விக்கும் இனிய பட்ஜெட்டாகவும் இருந்து இருக்கிறது. தேர்தலில் வாக்குகளை அள்ளும் அறிவிப்பை வெளியிட இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், பா.ஜனதா அரசாங்கமும் இந்த வாய்ப்பை நழுவவிடாது என்ற வகையில், இந்த இடைக்கால பட்ஜெட்டிலும் நல்ல அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.


Next Story