மோட்டார் வாகனங்களின் விலையை உயர்த்திய வாழ்நாள் வரி!


மோட்டார் வாகனங்களின் விலையை உயர்த்திய வாழ்நாள் வரி!
x

தமிழ்நாட்டில் இப்போது வாகனங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் இப்போது வாகனங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல, சாதாரண ஏழை எளியவர்கள் வீட்டிலும் கார் இல்லையென்றாலும் இருசக்கர வாகனங்கள் அவசியம் என்றாகிவிட்டது. கூலி வேலைக்கு செல்பவர்களுக்குக்கூட இருசக்கர வாகனம் ஒரு அத்தியாவசிய வாகனமாகிவிட்டது.

வாகனங்கள் ஆடம்பர பொருள் என்ற பட்டியலில் இருந்து, அத்தியாவசிய பொருள் என்ற வரிசைக்கு வந்துவிட்டது. அதனால்தான், சமீபத்தில் கொண்டாடி மகிழ்ந்த தீபாவளியையொட்டிகூட மோட்டார் வாகனங்களின் விற்பனை அமோகமாக இருந்தது. இந்த நிலையில், அரசின் வருவாய்க்கு பெருமளவில் துணையாக இருந்த மோட்டார் வாகன வரி உயர்த்தப்பட்டுள்ளது, புதிதாக வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மட்டுமல்ல, பழைய வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில், மோட்டார் வாகனங்களுக்கான வரியை உயர்த்தும் வகையில், ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, கவர்னரும் கடந்த மாதம் 6-ந்தேதி ஒப்புதல் அளிக்கவே, இது 7-ந்தேதி கெஜட்டிலும் வெளியிடப்பட்டுவிட்டது. அதன்பிறகு, உடனடியாக இந்த வாகன வரி உயர்வு அமலுக்கு வந்துவிட்டதால், இப்போது மோட்டார் வாகனங்கள் வாங்குபவர்கள், இதற்கு முன்பு இருந்த விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இருசக்கர வாகனங்கள் வாங்குபவர்களுக்கு, அந்த வாகனம் எவ்வளவு விலையாக இருந்தாலும், அதன் விலையில் 8 சதவீதமே வாழ்நாள் வரியாக வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்போது ரூ.1 லட்சத்துக்கு குறைவான விலையுள்ள இருசக்கர வாகனங்களுக்கு 10 சதவீதம் என்றும், ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான விலையுள்ள இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதமாகவும் வாழ்நாள் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மொபட்டுகள் மட்டும்தான் ரூ.1 லட்சத்துக்கு குறைவான விலையில் வாங்கமுடியுமே தவிர, பெரும்பாலான ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் விலை ரூ.1 லட்சத்துக்கு மேல்தான் இருக்கிறது.

புது இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமல்லாமல், பழைய வாகனங்களுக்கும் வாழ்நாள் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல ரூ.5 லட்சத்துக்கு குறைவான விலையுள்ள கார்களுக்கு 12 சதவீதமும், ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையிலான விலையுள்ள கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையிலான விலையுள்ள கார்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கு மேலான விலை கொண்ட கார்களுக்கு 20 சதவீதமும் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், மோட்டார் சைக்கிள் என்றாலும் சரி, கார் என்றாலும் சரி, ஆட்டோ ரிக்ஷா என்றாலும் சரி, அவைகளை வாங்கி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், பசுமை வரி என்று வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, சாலை பாதுகாப்பு வரியும் அனைத்து வாகனங்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இவ்வளவு வரி உயர்வு, மோட்டார் வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கும், புது வாகனங்கள் வாங்குபவர்களுக்கும் நிச்சயமாக வலிக்கும். இப்போது வரி உயர்த்தப்பட்டுவிட்டதால், இனி அரசு அதை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், வாகனங்கள் வைத்திருப்பவர்கள், பயன்படுத்தும் சாலைகள் சீரமைக்கப்படவும், வழியில் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தவும், இந்த வருவாயில் இருந்து அரசு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். வரியை உயர்த்தினாலும், அரசு வசதிகளையும் உயர்த்தி வழங்கியுள்ளதே என்ற மனநிறைவு ஏற்படவேண்டும்.


Next Story