கியாஸ் கசிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்த சோகம்

3 சிலிண்டர்களில், ஒரு சிலிண்டரில் மட்டும் கியாஸ் கசிவு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

Update: 2024-05-23 03:20 GMT

மைசூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் யரகனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் குமாரசாமி(வயது 45). இவரது மனைவி மஞ்சுளா(39). இவர்களுக்கு அர்ச்சனா(19), சுவாதி(17) என 2 மகள்கள் இருந்தனர். இவர்களது சொந்த ஊர் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் ஆகும். இவர்கள் சலவை தொழில் செய்து வந்தார்கள்.

பிழைப்புக்காக இவர்கள் கடந்த பல வருடங்களுக்கு முன்பே சிக்கமகளூருவில் இருந்து மைசூருவில் குடியேறி இருந்தார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் சிக்கமகளூருவில் வசித்து வரும் தங்கள் உறவினர் வீட்டுக்கு சென்றார்கள். அங்கு நடந்த திருமண நிகழ்ச்சியிலும் அவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலையில் அவர்கள் மைசூருவுக்கு திரும்பினார்கள். அதையடுத்து அவர்கள் வழக்கம்போல் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் வழக்கம்போல் உணவு சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் அவர்களது வீட்டுக்கு அர்ச்சனா மற்றும் சுவாதியின் தோழி வந்தார். அந்த இளம்பெண் நீண்ட நேரம் அவர்களது வீட்டின் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டின் கதவை தட்டிப்பார்த்தனர்.

அப்போதும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டில் குமாரசாமி, அவரது மனைவி மஞ்சுளா, மகள்கள் அர்ச்சனா, சுவாதி ஆகிய 4 பேரும் தாங்கள் படுத்து தூங்கிய இடத்திலேயே பிணமாக கிடந்தனர்.

அதைப்பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டில் கியாஸ் நெடி வந்ததால் அவர்கள் பதற்றம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுபற்றி ஆலனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் ரமேஷ் மற்றும் ஆலனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் ஆய்வு நடத்தியபோது கியாஸ் கசிவு ஏற்பட்டு இருந்ததும், அதனால் குமாரசாமி, அவரது மனைவி மஞ்சுளா, மகள்கள் அர்ச்சனா, சுவாதி ஆகிய 4 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து போலீசார் குமாரசாமி, அவரது மனைவி மஞ்சுளா, மகள்கள் அர்ச்சனா, சுவாதி ஆகிய 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் இருந்த 3 சிலிண்டர்களில், ஒரு சிலிண்டரில் மட்டும் கியாஸ் கசிவு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. கியாஸ் கசிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்