நடிகர் தர்ஷனின் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு

ரசிகர் கொலையில் தர்ஷன் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் நாளை (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.;

Update:2025-07-23 06:54 IST

பெங்களூரு,

சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு 17 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்தநிலையில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 7 பேரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் இந்த மனு மீதான வழக்கு விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அப்போது தர்ஷன் தரப்பில் ஆஜராக வேண்டிய மூத்த வக்கீல் கபில் சிபில், தனக்கு மற்றொரு வழக்கு இருப்பதால், ஒரு நாள் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். நாளையே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தர்ஷன் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவாரா? அல்லது அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது நாளை தெரிந்துவிடும்.

தற்போது நடிகர் தர்ஷன், 'டெவில்' படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளார். அவர் கோர்ட்டு அனுமதி பெற்று தாய்லாந்து சென்றுள்ளார். அங்கிருந்து இந்த மாதம் இறுதியில் பெங்களூருவுக்கு திரும்ப முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்