பா.ஜ.க. செய்தித்தொடர்பாளராக சசிதரூர் மாறிவிட்டார்; காங். மூத்த தலைவர் விமர்சனம்
பனாமாவுக்கு சசிதரூர் தலைமையிலான குழு சென்றது.;
டெல்லி,
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை வெளிப்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் மத்திய அரசு அனைத்துக்கட்சி குழு அமைத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் குழுவினர் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்து வருகின்றனர்.
இதனிடையே, பனாமாவுக்கு சசிதரூர் தலைமையிலான குழு சென்றது. அந்த குழு பனாமா அதிகாரிகளை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் எடுத்துரைத்தது. அப்போது, அங்கு செய்தியாளர்களை சந்தித்த சசிதரூர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை பாராட்டினார்.
இந்நிலையில், மோடி மற்றும் பா.ஜ.க. அரசை பாராட்டிய சசிதரூரை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான உதித் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக உதித் ராஜ் கூறுகையில், பா.ஜ.க.வின் சூப்பர் செய்தித்தொடர்பாளராக சசிதரூர் மாறிவிட்டார். பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடி, பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக பேசுவதை விட சசிதரூர் அதிக ஆதரவாக பேசுகிறார்' என்றார்.