ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து 272 இந்தியர்கள் மீட்பு
ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 1,100-க்கும் மேற்பட்டோரை நேற்று முன்தினம் இந்தியா அழைத்து வந்தது.;
புதுடெல்லி,
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. ஈரானில் உள்ள தங்களுடைய நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கேட்டு கொண்டன. அவர்களை மீட்கும் முயற்சிகளையும் மேற்கொண்டன.
இதன்படி, இந்தியாவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்து என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையில் முதல் விமானம் ஈரானில் இருந்து 110 இந்தியர்களுடன் கடந்த 19-ந்தேதி டெல்லி வந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து ஈரானில் இருந்து விமானங்கள் வந்தன. 290 பேர், 311 பேர், 280 பேர் என இந்திய பயணிகள் வந்தனர்.
இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவு தெரிவிக்கின்றது. அவர்களை வெளிவிவகார அமைச்சகத்தின் இணை மந்திரி பபித்ரா மார்கரிட்டா வரவேற்றார்.
இந்நிலையில், ஈரானின் மஷாத் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை 12.01 மணியளவில் 272 இந்தியர்கள் மற்றும் 3 நேபாள நாட்டினர் கொண்ட சிறப்பு விமானம் வந்திறங்கியது. இதனால், இதுவரை 3,426 இந்தியர்கள் ஈரானில் இருந்து சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர் என வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்து உள்ளார்.
டெல்லிக்கு நேற்று 296 இந்தியர்கள் மற்றும் 4 நேபாள நாட்டினர் சிறப்பு விமானத்தில் வந்திறங்கினர். இதேபோன்று, ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 1,100-க்கும் மேற்பட்டோரை நேற்று முன்தினம் இந்தியா அழைத்து வந்தது. இந்தியாவுக்கு வந்தடைந்ததும் அவர்கள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.