தாய்மாமாவுக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மருமகன்... அடுத்து நடந்த கொடூரம்

தாய்மாமாவின் 2-வது திருமணம் குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என மருமகன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-06-18 13:53 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சாகிப் (வயது 27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில், சாகிப்பின் தாய்மாமா தனது மனைவி சபானா பானுவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால், அவர்கள் இடையே பேச்சுவார்த்தை அதிகமாக இல்லை. இதன்காரணமாக சாகிப்பின் தாய்மாமா 2-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதாவது முதல் மனைவிக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தார். அதற்கு துணையாக சாகிப்பை அவர் சேர்த்து கொண்டார். இதையடுத்து சாகிப், மைசூருவில் ஒரு பெண்ணை பார்த்து தாய்மாமாவுக்கு திருமணம் செய்து வைத்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில், 2-வது திருமணம் செய்து கொண்ட விவகாரம் முதல் மனைவிக்கு தெரியவந்தது. இதுகுறித்து சாகிப்பிடம் சபானா பானு கேட்டுள்ளார். அப்போது தாய்மாமாவின் 2-வது திருமணம் குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும், அவர் சாகிப்பை விடவில்லை. இதையடுத்து சாகிப் அங்கிருந்து தப்பி சென்றார்.

இந்தநிலையில், சம்பவத்தன்று அவர் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு சபானா பானு, அவரது மகன் ஆர்பீத், மகள் ஆல்பியா ஏண்டா ஆகிய 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் சாகிப்பை சரமாரியாக தாக்கினர். இதில், அவர் கீழே விழுந்தார். அப்போது தாங்கள் மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாகிப்பின் உடலில் பல்வேறு இடங்களில் அவர்கள் 3 பேரும் குத்திவிட்டு தப்பி சென்றனர்.

இதில், அவர் பலத்தகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சாகிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து உதயகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தாய்மாமாவுக்கு 2-வது திருமணம் செய்து வைத்ததால் முதல் மனைவியான சபானா பானு, அவரது மகன் ஆர்பீத், மகள் ஆல்பியா ஏண்டா ஆகிய 3 பேரும் சேர்ந்து சாகிப்பை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர் பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்