இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-04-17 09:06 IST


Live Updates
2025-04-17 13:54 GMT

"சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை” - அமலாக்கத் துறை

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை என்றும், பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்க வைக்கப்படவில்லை என்றும், டாஸ்மாக் தலைவர், மேலாளருக்கு தெரியப்படுத்திய பிறகே சோதனை நடந்தது என்றும், பொய்யான தகவல்களை கூறி வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாகவும் சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது.

2025-04-17 13:52 GMT

ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது. 

2025-04-17 12:56 GMT

த.வெ.க. கட்சிக் கொடியில் யானை சின்னம் - கட்சித் தலைவர் விஜய் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு

தமிழக வெற்றி கழகம் கட்சிக் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

2025-04-17 12:13 GMT

“ஜனாதிபதிக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு என்ன சூப்பர் நாடாளுமன்றமா?” - ஜகதீப் தன்கர் கேள்வி

மாநிலங்களவை பயிற்சியாளர்கள் குழுவிடம் பேசிய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், “சமீபத்திய தீர்ப்பு ஒன்றில் ஜனாதிபதிக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாம் எங்கே போகிறோம்?. நாட்டில் என்ன நடக்கிறது?. நாம் மிகவும் உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். ஜனாதிபதி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார். இல்லையென்றால் அது சட்டமாகிறது.

சட்டம் இயற்றும், நிர்வாக பணிகளை செய்யும், சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படும் நீதிபதிகள் நம்மிடம் உள்ளனர். ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை. ஆனால் அவர்களுக்கு எந்த பொறுப்புணர்வும் இல்லை. ஏனெனில் இந்நாட்டின் சட்டம் அவர்களுக்கு பொருந்தாது. ஜனாதிபதிக்கு உத்தரவிடும் அளவுக்கு என்ன சூழல் தற்போது உருவாகி உள்ளது.

அரசியலமைப்பின் கீழ் நீதிபதிகளுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3) இன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே. ஆனால் பிரிவு 142 ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல சுப்ரீம்கோர்ட்டு மாற்றி உள்ளது” என்று கூறினார். 

2025-04-17 12:08 GMT

உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை மருதமலையில் அமைகிறது - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு

கோவை மருதமலை முருகன் கோவிலில், அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் உலகிலேயே மிக உயரமான (184 அடி) முருகன் சிலை மருதமலையில் அமைய உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

2025-04-17 12:04 GMT

கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்


கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்.மத்திய அரசின் அவசர அழைப்பின்பேரில் புதுடெல்லி செல்வதாக கூறப்படுகிறது. முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுக்காமல், நீண்ட காலம் நிலுவையில் வைத்திருந்தது பற்றி கடந்த வாரம் சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பை அளித்து, கவர்னரின் நடவடிக்கையை கண்டித்தது. இது, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கு மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் மத்திய அரசுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2025-04-17 11:27 GMT

கர்நாடகாவில் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதனால், போராட்டம் திரும்ப பெறப்பட்டு உள்ளது.

2025-04-17 11:26 GMT

கோவில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மாத பவுர்ணமி, பழனி கோவில் தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவில் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகிய நாட்களிலும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

2025-04-17 10:58 GMT

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மத்திய அரசுக்கு எதிராக பிரீடம் பூங்காவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த 11 ஆண்டுகளில், சீராக விலையை உயர்த்தி வருகிறது. தற்போது பெட்ரோல் மற்றும் கியாஸ் விலை உயர்ந்துள்ளது. ஒவ்வொருவரையும் இது கடுமையாக பாதித்துள்ளது என கூறியுள்ளார். பிரதமர் மோடியின் நல்ல நாட்கள் வருகின்றன என்ற வாக்குறுதி பொய்யாகி விட்டது. அவர்கள் வாக்குறுதி அளித்தது இந்த நல்ல நாட்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2025-04-17 10:00 GMT

தமிழக அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க தமிழக டி.ஜி.பி.க்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என்றும் அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ள ஐகோர்ட்டு, வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும், இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்