தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும்: எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சர் - நயினார் நாகேந்திரன்

தி.மு.க.வை அகற்ற எல்லா கட்சியினரும் ஓர் அணியில் இணைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.;

Update:2025-06-15 06:28 IST

கோப்புப்படம் 

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் திருவாரூரில், மாவட்ட பா.ஜ.க. கட்சி சார்பில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மதுரையில் வருகிற 22-ந் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முருக பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இந்த மாநாட்டிற்கு தமிழக முதல்-அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர் தடங்கல் ஏற்படுத்துகின்றனர். தி.மு.க. தோல்வி பயத்தில் இருந்து வருகிறது. விரைவில் தேர்தல் வரும், ஆட்சி மாற்றம் உறுதி என்ற நிலையில் மக்கள் உறுதியாக காத்திருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் மதுரை மாநாட்டிற்கு தடங்கல் ஏற்படுத்தி வருவது சரியானதல்ல. ஆனால் கோர்ட்டு சரியான வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. அதன்படி முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெறும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும். எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சர். மத்திய அரசு கொடுக்கின்ற எல்லா திட்டத்திலும் 70 சதவீத நிதியை பயன்படுத்திக் கொண்டு மாநில அரசு செய்ததுபோல் முதல்-அமைச்சர் காட்டி கொண்டிருக்கிறார். தி.மு.க தமிழ் பண்பாடு, கலாசாரத்தை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.

எல்லா கட்சியினரும் ஓர் அணியில் இணைய வேண்டும் என்பது எனது கருத்து. அப்போதுதான் தி.மு.க.வை அகற்ற முடியும். டாஸ்மாக் ஊழலில் கோர்ட்டு தடை உத்தரவிட்டுள்ளது. இடைக்கால தடை முடிந்த பின்பு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்