பெங்களூரு: சாலையில் பாகிஸ்தான் கொடியை ஒட்டிய 6 பேர் கைது

பெங்களூருவில் சாலையில் பாகிஸ்தான் கொடியை ஒட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-04-27 17:53 IST

பெங்களூரு,

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் கர்நாடகத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கலபுரகி டவுன் ஜகத் சர்க்கிள், நேஷனல் சவுக் பகுதியில் உள்ள சாலையில் பாகிஸ்தான் கொடிகள் ஒட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பாகிஸ்தான் கொடியை கிழித்து எறியப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து கலபுரகி டவுன் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிலர் பாகிஸ்தான் நாட்டு கொடியை சாலையில் ஒட்டியது தெரியவந்தது. இதை பார்த்து முஸ்லிம் பெண்கள் அந்த கொடியை அகற்றியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் கொடியை சாலையில் ஒட்டியதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்