சர்ச்சை பதிவு விவகாரம்: ஆதவ் அர்ஜூனா மனு மீது 5-ந்தேதி விசாரணை
வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ஆதவ் அர்ஜூனா மனு தாக்கல் செய்துள்ளார்.;
சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் நடத்திய ‘ரோடு ஷோ' நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தில் த.வெ.க. நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து த.வெ.க., தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தன் எக்ஸ் தளத்தில், “அரசின் அடக்குமுறைக்கு எதிராக இலங்கை, நோபாளம் நாடுகளில் நடந்ததுபோல, தமிழ்நாட்டிலும் புரட்சி ஏற்படும்” என எச்சரிக்கை செய்திருந்தார்.
இதுகுறித்து, ஆதவ் அர்ஜூனா மீது கலவரத்தை தூண்டி, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துகிறார் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ஆதவ் அர்ஜூனா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “வழக்குகளை ரத்து செய்யக்கோரும் மனுக்களை விசாரிக்கும் நீதிபதி (ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா) முன்பு இந்த வழக்கை வருகிற நவம்பர் 5-ந்தேதி விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.