தூத்துக்குடியில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
தூத்துக்குடியில் குடும்பத்தகராறு காரணமாக கணவரை பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழந்தைளுடன் முத்தையாபுரம் பகுதியில் மனைவி வசித்து வருகிறார்.;
தூத்துக்குடி அண்ணாநகர் 3வது தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் இசக்கிபாண்டி (வயது 42). இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு சந்தோஷ்(17) என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக பரமேஸ்வரி கணவரை பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழந்தைளுடன் முத்தையாபுரம் காந்திநகர் 3வது தெருவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு இசக்கிபாண்டி அவரது வீட்டுக்கு சென்று மனைவியிடம் என்னுடன் குடும்பம் நடத்த வா, இல்லை என்றால் உன்னை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி, கத்தியால் குத்த முயன்றார். அப்போது அவரை தடுக்க முயன்ற அவரது மகனுக்கு கையில் கத்தி குத்தியதால் காயம் ஏற்பட்டது.
இதில் காயம் அடைந்த சந்தோஷ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முககுமாரி வழக்குப்பதிவு செய்து இசக்கிபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.