நெல்லையில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் முன்னாள் இன்ஸ்பெக்டர் மகன் கைது
பாளையங்கோட்டையில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.;
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் மாலையில் வகுப்புகள் முடிந்தவுடன் வழக்கம்போல் மாணவ-மாணவிகள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தவறான கண்ணோட்டத்துடன் மாணவிகளை நோட்டமிட்டவாறு இருந்தார்.
இதனால் சில மாணவிகள் வேறு இடத்துக்கு நகர்ந்து சென்றனர். அப்போது அந்த வாலிபர் திடீரென்று 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மற்றும் சக மாணவிகள் கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று மாணவிக்கு பாலியல் தொல்ைல கொடுத்த வாலிபரை மடக்கி பிடித்து ‘தர்ம அடி’ கொடுத்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாளையங்கோட்டை மகாராஜநகர், ரகுமத்நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ரமேஷ் (வயது 35) என்பது தெரியவந்தது. இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ரமேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவருடைய தந்தை கருப்பசாமி, ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவார். அவர் இறந்து விட்டார். பாளையங்கோட்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.