மத்திய அரசை எதிர்த்து பேசி 'கைதட்டல் வாங்கலாம், வாக்குகள் வாங்க முடியாது' - மு.க.ஸ்டாலினுக்கு, எல்.முருகன் பதில்
பிரிவினை பேசி தமிழக மக்களை திசை திருப்ப முடியுமா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மாமல்லபுரத்தில் தனது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜி.எஸ்.டி., புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு என மத்திய அரசு தொல்லை கொடுப்பதாக வெறுப்பு அரசியலை அரங்கேற்றி இருக்கிறார்.
வடக்கு-தெற்கு, டெல்லி-சென்னை என்று பிரிவினை பேசி, விஷத்தை பரப்பி, தி.மு.க. மீது கடும் கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை திசை திருப்ப முடியுமா என கனவு காண்கிறார். மத்திய அரசை எதிர்த்து பேசி சொந்தக் கட்சிகாரர்களிடம் மு.க.ஸ்டாலின் கைத்தட்டல் வாங்கி விடலாம். ஆனால் தமிழக மக்களிடம் அவரால் வாக்குகளை வாங்க முடியாது.
டெல்டா மாவட்டங்களில் ஆண்டாண்டு காலமாக செய்து வரும் நெல் கொள்முதலை கூட சரியான முறையில் செய்யாமல் அலட்சியத்தில் இருக்கிறது இந்த தி.மு.க. அரசு. ஆனால், சினிமா இயக்குனர்கள், நடிகர்களை சந்தித்து பேச நேரம் இருக்கும் முதல்-அமைச்சருக்கு, தன்னுடைய அரசின் அலட்சியத்தால் கொட்டும் மழையில் நெல் முளைத்து பெரும் நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை.
இந்த ஆட்சி அடுத்த ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தொடரும் என மு.க.ஸ்டாலின் நம்புவது தான் வேடிக்கை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதி என்ன என்று மக்கள் அவரை கேட்கின்றனர். அவர் அதற்கு முதலில் பதில் சொல்லட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.