பாமக தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றம் - ராமதாஸ் அறிவிப்பு
அன்புமணியின் நடைப்பயணத்தால் வட தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக ராமதாஸ் தெரிவித்தார்.;
விழுப்புரம்,
தைலாபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:-
சென்னையில் இருந்து பாமக தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பாமகவின் தலைமை அலுவலகம் தைலாபுரம் இல்லத்தில்தான் செயல்படுகிறது. சென்னையிலோ வேறு பகுதியிலோ தலைமை அலுவலகம் வைத்திருந்தால் அது சட்டத்திற்கு புறம்பானது.
பனையூரில் பாமக தலைமையகம் இருப்பதாக சொல்வது, தாங்களாகவே நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டு செயல்படுவது சட்டவிரோதமானது. கட்சி தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்
சிறப்பு பொதுக் குழுவின்படி பாமகவின் செயல் தலைவராக அன்புமணி தொடர்வார். தன்னை 'தலைவர்' எனக் கூறி கொண்டால் நடவடிக்கை பாயும். என்னை தவிர யாரும் உரிமை கோர முடியாது
மே மாதம் முதல் பாமகவின் தலைவர் ராமதாஸ், கவுரவ தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக அன்புமணிஎன பொறுப்புகள் வழங்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு யாராவது, 'நான்தான்' என பவனி வந்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
பாமக கொடியை யாரும் பயன்படுத்தக் கூடாது, என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம். அன்புமணியின் நடைப்பயணத்தால் வட தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.