கரூரில் கூட்ட நெரிசலுக்கு காவல் துறையினரின் மெத்தனப் போக்கே காரணம்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-27 23:37 IST

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆறு குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பிரசாரக் கூட்டத்திற்கு வருவதை குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தவிர்க்க வேண்டுமென்று விஜய் வேண்டுகோள் விடுத்த நிலையிலும், இதுபோன்றதொரு சம்பவம் நடைபெற்று இருப்பது வருத்தமளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கவும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும். இனி வருங்காலங்களில் இதுபோன்று கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எடுக்கவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேற்படி கூட்ட நெரிசலுக்கு காவல் துறையினரின் மெத்தனப் போக்கும் ஒரு காரணம். எனவே, மேற்படி சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்