திருநெல்வேலி: அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ராஜவல்லிபுரம் அருகே பைக்கில் மது போதையில் வந்த 2 பேர் அரசு பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டு, பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.;
நெல்லை மாநகரம், வண்ணாரப்பேட்டை புறவழிச் சாலை பணிமனையை சேர்ந்த ஓட்டுநர் வனராஜ் (வயது 49) கடந்த 5ம்தேதி திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து காட்டாம்புளி நோக்கி, ராஜவல்லிபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மது போதையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டி வந்து, ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டு, பேருந்தின் கண்ணாடியை உடைத்து பேருந்தில் இருந்த பொதுமக்கள் இடையே பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி, ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து வனராஜ் தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டார். அதில் மணிகண்டராஜா என்பவர் மேற்சொன்ன குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்து, காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கும், சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மணிகண்ட ராஜாவை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த, தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.