இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025

Update:2025-06-03 08:59 IST
Live Updates - Page 2
2025-06-03 08:09 GMT

கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை - கமல்ஹாசன்

கர்நாடக பிலிம் சேம்பர் தலைவர் நரசிம்மலுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:-

கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை. கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கன்னடர்கள் தங்கள் தாய்மொழி மீது வைத்து இருக்கும் அன்பு மீது மிகுந்த மரியாதை உண்டு. கன்னடம் குறித்த எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது. கன்னடத்தை பிரிக்க நினைக்கவில்லை

ஒரு மொழியின் மீது மற்றொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை நான் எப்போதும் எதிர்த்து வருகிறேன். சிவராஜ்குமார் அவமானங்களை சந்திக்க நேர்ந்தது எனக்கு வருத்தமளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற நோக்கத்தில் பேசினேன்.

தமிழ், கன்னடா, தெலுங்கு, மலையாளம் என இந்த நிலத்தின் அனைத்து மொழிகளும் என் மனதுக்கு நெருக்கமானவையே. நான் சினிமா மொழியை பேசுபவன்; இம்மொழிக்கு அன்பும் உறவும் மட்டுமே தெரியும். என்னுடைய கருத்தும் நமக்கிடையேயான அன்பையும் உறவையும் பலப்படுத்தவே சொல்லப்பட்டது" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2025-06-03 07:56 GMT

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அண்ணாபல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், “ அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. #SaveOurGirls_NotYourSir எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன. யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? சில விடைகளும், பல கேள்விகளும்!” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தநிலையில், தற்போது இந்த கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.


2025-06-03 07:35 GMT

கோடிக்கணக்கான மக்கள் இந்த கோப்பைக்காகக் காத்திருக்கிறோம் -டி.கே.சிவக்குமார்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆமதாபாத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தங்களின் முதல் கோப்பைக்காக பெங்களூரு- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையொட்டி பெங்களூரு அணிக்கு கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நெகிழ்ச்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கர்நாடகா உங்களோடு இருக்கிறது. அரசு சார்பில் உங்களை வாழ்த்துகிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த கோப்பைக்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

2025-06-03 07:30 GMT

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்: கர்நாடக ஐகோர்ட்டு

கர்நாடகாவில் ‘தக் லைப்’ படத்திற்கு தடையை விலக்கக்கோரிய மனு மீதான விசாரணையில் அம்மாநில ஐகோர்ட்டு நீதிபதிகள் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வறிஞரா? மொழியியல் வல்லுநரா? தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?. கமல் பேச்சால் சமூகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது, பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினைக்கு காரணமே கமல்ஹாசனின் பேச்சுதான். மன்னிப்பு கேட்க முடியாது என்று வேறு கூறியுள்ளார். கர்நாடக மக்களின் உணர்வுகளை கமல் புண்படுத்தியுள்ளார்.

வணிக ஆதாயம் மட்டும் வேண்டும் என இப்போது தக் லைப் படத்திற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளீர்கள். ஒரு மன்னிப்பு கேட்டாலே பிரச்னை தீர்ந்துவிடும். மன்னிப்பு கேட்க முடியாது.. ஆனால் உங்கள் படம் மட்டும் கர்நாடகத்தில் ஓட வேண்டுமா? மன்னிப்பு கேளுங்கள் அப்போதுதான் இங்கிருந்து சில கோடிகளை சம்பாதிக்க முடியும். 2.30 மணிக்குள் ஒரு முடிவை கமல் தரப்பு கூற வேண்டும். பிறகு என்னுடைய தீர்ப்பை அறிவிக்கிறேன் என்று நீதிபதிகள் கட்டமாக தெரிவித்துள்ளனர்.

2025-06-03 06:35 GMT

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ-க்கு தகவல் பகிர்ந்த நபர் கைது

ஆபரேஷன் சிந்தூர் செயல்பாட்டில் இருந்தபோது இந்திய ராணுவத்தின் தகவல்களை பகிர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐக்கு தகவல் பகிர்ந்த ககன்தீப் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உளவுத்துறை அளித்த ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2025-06-03 06:31 GMT

திருச்செந்தூர் கோவிலில் ரூ. 3.42 கோடி உண்டியல் காணிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மே மாத மட்டும் சுமார் ரூ. 3.42 கோடி உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. மேலும் தங்கம் - 1,701 கிராம், வெள்ளி - 22,791 கிராம், 1,237 எண்ணிக்கை வெளிநாட்டு பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

2025-06-03 06:29 GMT

வங்கதேசம்: ஷேக் முஜிபுர் ரகுமானின் புகைப்படம் ரூபாய் நோட்டுகளில் இருந்து நீக்கம்

வங்கதேச தந்தையான ஷேக் முஜிபுர் ரகுமானின் புகைப்படத்தை அந்நாட்டு ரூபாய் நோட்டுகளில் இருந்து இடைக்கால அரசு நீக்கியுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளில் அந்நாட்டின் கலாசார சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படாது, புழக்கத்திலேயே இருக்கும் எனவும் அந்நாட்டின் மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது.

2025-06-03 05:55 GMT

விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டம்

விதிகளை மீறி மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றும் நிறுவனங்கள், குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. தற்போது, மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றினால் [இணைப்புகள் துண்டிக்கப்பட்டு குடியிருப்பு வாசிகளுக்கு ரூ. 5,000, நிறுவனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

2025-06-03 05:53 GMT

செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரி பணியிட மாற்றம்?

சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் பியூஷ் குமார் யாதவ், துணை இயக்குநர் கார்த்திக் தசாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.ஆர்.எஸ். (IRS) அதிகாரிகளான இருவரும் வருமான வரித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரி பியூஷ் குமார் யாதவ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்