வீட்டில் வைத்திருந்த இன்வெர்ட்டர் பேட்டரி வெடித்து ஒருவர் பலி
உத்தர பிரதேசத்தின் அமேதி மாவட்டம் மர்தௌலி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலையில் இன்வெர்ட்டர் பேட்டரி வெடித்ததில் நௌரங் பகதூர் (வயது 62) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி அனுசுயா சிங் (வயது 60) பலத்த காயமடைந்தார்.
ஜெய்ப்பூரில் சாலை விபத்து- 5 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் திருமண விழாவிற்காக சென்றவர்களின் வாகனமும், லாரியும் மோதி விபத்துக்குள்ளாகின. தௌசா-மனோகர்பூர் நெடுஞ்சாலையில் பட்கபாஸ் கிராமத்தின் அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் மணமகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
மத்திய மந்திரி எல்.முருகன் கூறியது உண்மைதான்: நயினார் நாகேந்திரன் தகவல்
தி.மு.க. கூட்டணயில் உள்ள ஒரு கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இணைய உள்ளதாகவும் இதுபற்றி பேசி வருவதாகவும் மத்திய மந்திரி எல்.முருகன் சமீபத்தில் கூறியிருந்தார். இதுபற்றி மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது ‘அது உண்மைதான்’ என்றார். ஆனால் எந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை என்பதை இப்போதைக்கு கூற முடியாது என்றார்.
டெல்லியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்
டெல்லியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இன்று காலை தெற்கு டெல்லியின் கோவிந்தபுரி பகுதியில் டெல்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளின் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் முலம் இடித்து தள்ளப்பட்டன. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
லாலு பிரசாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:-
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
விளிம்புநிலை மக்களை அதிகாரத்தின் மையத்தில் இருத்திய இந்திய அரசியலின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர் லாலு பிரசாத் அவர்கள். மண்டல் ஆணையப் பரிந்துரைகளை உறுதியாக நடைமுறைப்படுத்தியும், மதவாத சக்திகளுக்கு எதிரான வலுவான அரணாக இருந்தும் சமூகநீதிக் கருத்தாடலில் தேசிய அளவில் புதுப்பாதை வகுத்தவர் அவர். அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு ராகுல் காந்தி எம்.பி. கடிதம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான விடுதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், அந்த விடுதிகளை பராமரித்து மேம்படுத்தவேண்டும் என்றும் கூறி உள்ளார். மேலும், மாணவர்களுக்கான உதவித் தொகையை சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
மீனவர்கள் வேலைநிறுத்தம்
கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியில் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. போராட்டத்தில் சுமார் 300 மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பேர் பலியானதாகவும், ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.